வரலாற்றுப் படம்: தனுஷ் இயக்கத்தில் நாகர்ஜூனா, அதிதி

பா பாண்டி திரைப்படத்திற்கு பின், தனுஷ் இயக்கத்தில் உருவாகும் வரலாற்றுப் படத்தில் நாகர்ஜூனா, அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் நடிக்கின்றனர்.


கடந்த ஆண்டு தொடக்கத்தில், 'பா பாண்டி' படத்தின் வெற்றிக்குப் பின், தனுஷ் இயக்கவிருந்த அவரது இரண்டாவது படம் கைவிடப்பட்டது என செய்திகள் வந்தன. அதனைத் தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறனின் அசுரன் படத்தில் தனுஷ் கவனம் செலுத்தி வந்ததால் இப்படம் துவங்க காலதாமதம் ஆகலாமே தவிர, தனுஷின் இரண்டாவது படம் உறுதி என படக்குழு தெரிவித்தது. அதன் பின்னர், இது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.



அசுரனின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பின் தனுஷின் பட்டாஸ் வெளியானது. அதன் பின்னர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் என்ற படத்திலும் தனுஷ் நடித்து முடித்தார். அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படம், கொரோனா ஊரடங்கு முடிந்தபின் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில், மாரி செல்வராஜுடன் கர்ணன், கார்த்திக் நரேனுடன் ஒரு படம் என நடிப்பில் பரபரப்பாக இயங்கி வந்தார் தனுஷ்.



இந்நிலையில், தனுஷ் தன்னுடைய இயக்கத்தில் உருவாகவுள்ள கனவு படத்தை துவங்கவிருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது. சுதந்திரத்துக்கு முன்புள்ள காலத்தை களமாக கொண்டமையும் இப்படத்திற்கு 'நான் ருத்ரன்' என்ற தலைப்பும் வைக்கப்பட்டுள்ளது. படம் மற்றும் தலைப்பு குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரவுள்ள நிலையில், தற்காலிகமாக இப்படத்திற்கு 'DD 2' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் தனுஷ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா, நடிகை அதிதி ராவ் ஹைதாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். தேனாண்டாள் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் ஆகியோரும் உள்ளனர். தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் தயாராகவுள்ளது.

சில மாதங்கள் முன், இப்படம் குறித்து நாகர்ஜுனா பேசுகையில், "இது ஒரு பீரியட் டிராமா. இந்த பாத்திரம் எனக்கு கூடுதல் சிறப்பு வாய்ந்தது, ஏனென்றால் நான் இதற்கு முன்பு செய்யாத ஒன்றை இப்படத்தில் முயற்சிக்கப் போகிறேன்" என கூறியுள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்ய பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

-முகேஷ் சுப்ரமணியம்
Blogger இயக்குவது.