மக்கள் ஒன்று கூடி வடமராட்சி கிழக்கில் ஆர்ப்பாட்டம்!!

யாழ்.வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் தனியாருக்கு மணல் அகழ்வு அனுமதி வழங்கப்பட்டதை கண்டித்து இன்று காலை மீண்டும் பொதுமக்கள் கூடி எதிர்ப்பினை வெளியிட்டதால் அங்கு சிறிது நேரம் பதட்டம் நிலவியதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரதேச மக்களுக்கு மணல் அகழ்வுக்கு முன்னுரிமை வழங்கப்படவேண்டும். என்ற கட்டுப்பாடை மீறி தனியாருக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதை எதிர்த்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரதேசவாசிகள் எதிர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் பொலிஸார் தலையிட்டதன் அடிப்படையில் 2 நாள் அவகாசம் வழங்கி மக்கள் போராட்டத்தை நிறுத்தியிருந்த நிலையில் அவகாசம் முடிந்ததை தொடர்ந்து இன்று காலை மக்கள் பெருமளவில் கூடி மணல் அகழ்வை எதிர்த்து போராட்டம் நடத்தியிருந்தனர்.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் தலையிட்டு மக்களுடன் கலந்துரையாடினர்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் யாழ்.மாவட்ட செயலர் மற்றும் மருதங்கேணி பிரதேச செயலர் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நிலையில் அவர்கள் தமக்கு எதுவும் தெரியாது. என கைவிரித்திருக்கின்றார்கள்.
இந்நிலையில் முன்னாள் யாழ்.மாவட்ட செயலரான கணேசஸ் காலத்தில் மணல் அகழ்வுக்கு எதிராக தம்மால் ஒரு வழக்கு தொடரப்பட்டதாகவும், அந்த வழக்கில் தனியாருக்கு மணல் அகழ்வு அனுமதி வழங்க முடியாது என்ற தீர்ப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.
அதனடிப்படையில் நாம் நடவடிக்கையில் இறங்குவோம். என கூறியதுடன், மணற்காடு கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் பாரவூர்தி சங்கம் ஆகியவற்றை ஒன்றாக சந்தித்து இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனவும் சுமந்திரன் உறுதியளித்தை தொடர்ந்து போராட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை 480 கியூப் மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில் இதுவரையில் 800 கியூப் மணல் அகழப்பட்டுள்ளமையினை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன், உடனடியாக மணல் அகழ்வை நிறுத்துமாறு பணித்துள்ளதுடன், இனி மணல் அகழப்பட்டால் கைது செய்யப்படுவீர்கள் எனவும் பொலிஸார் எச்சரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Blogger இயக்குவது.