சினிமா படப்பிடிப்புக்கு ஆந்திர முதல்வர் அனுமதி!

தெலுங்கு சினிமாவை மீட்டெடுக்கும் முயற்சியில் அங்குள்ள நடிகர்கள், தயாரிப்பாளர்கள் ஆகியோர் நடிகர் சிரஞ்சீவி தலைமையில் முயற்சி செய்து வருகின்றனர்.

திரைப்பட படப்பிடிப்புத் தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்கள் தேசிய ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி இருந்த சூழலில் நடிகர் சிரஞ்சீவி நிதி திரட்டி அவர்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்தார். இந்த நிலையில் ஹைதராபாத்தைத் தலைநகராகக் கொண்ட தெலுங்கு தேச மாநில அரசு படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.



இதைத் தொடர்ந்து சிரஞ்சீவி தலைமையில் தெலுங்குத் திரைப்பட நடிகர் நாகார்ஜுனா, இயக்குநர் ராஜமெளலி, தயாரிப்பாளர்கள் சி. கல்யாண், தில்ராஜு உள்ளிட்டோர் அமராவதியில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியைச் சந்தித்துப் பேசினர்.

தெலுங்குத் திரையுலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், கொரோனா வைரஸ் தொற்று பரவல் பிரச்சினையால் ஏற்படும் இழப்பு குறித்து முதல்வருடன் விவாதிக்கப்பட்டது. இந்தச் சந்திப்புக்குப் பின்னர் நடிகர் சிரஞ்சீவி செய்தியாளர்களிடம் கூறும்போது, “தெலங்கானாவில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் வரும் 15ஆம் தேதிக்குப் பிறகு ஆந்திராவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியுள்ளார்.

தெலுங்குத் திரைத்துறை வளர்ச்சிக்கு விசாகப்பட்டினத்தில் 300 ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அங்கு ஸ்டூடியோக்கள் கட்டப்படும். படப்பிடிப்புகள் நடத்தப்படும். ஆந்திர அரசின் நந்தி விருதுகள் வழங்கும் விழா விரைவில் நடைபெறும் என முதல்வர் உறுதி அளித்தார்” என்றார்.

-இராமானுஜம்
Blogger இயக்குவது.