குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச மாஸ்க்!

குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச மாஸ்க் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, வெளியில் செல்லும்போது கட்டாயம் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. அதேநேரம், ஏழை எளிய மக்கள் மாஸ்க் வாங்குவதில் உள்ள பொருளாதாரச் சிக்கல் குறித்து தற்போது தமிழக அரசு கருத்தில்கொண்டுள்ளது. எனவே ரேஷன் கடைகளில் இலவசமாக மாஸ்க் வழங்க திட்டமிட்டுள்ளது,



இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மொத்தம் உள்ள 2,08,23,076 குடும்ப அட்டைகளில், 6,74,15,899 குடும்ப உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு மாஸ்க் என்ற அடிப்படையில், 13,48,31,798 மறுமுறை பயன்படுத்தும் வகையில் மாஸ்க்குகள் வழங்கப்படவுள்ளன.

அதன்படி, மாஸ்க் விலை நிர்ணயம் செய்து வாங்குவதற்குத் தமிழக அரசு வருவாய் நிர்வாக ஆணையர் தலைமையில் குழு அமைத்துள்ளது. இதில் பேரிடர் மேலாண்மை இயக்குநர், பொதுச் சுகாதாரத் துறை இயக்குநர், நிதித் துறை துணைச் செயலாளர் உள்ளிட்ட ஏழு பேர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு உரிய விலையில் மாஸ்க்குகளை கொள்முதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து தமிழக அரசிடம் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கும். அதன் அடிப்படையில் மாஸ்க்குகள் கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

-கவிபிரியா
Blogger இயக்குவது.