தந்தைக்கு அருகில் அன்பழகன்

மறைந்த ஜெ.அன்பழகன் உடல் கண்ணம்மா பேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டை ரேலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று (ஜூன் 10) காலை உயிரிழந்தார். தனது 62ஆவது பிறந்தநாளிலேயே அவர் உயிரிழந்தது திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியது. மருத்துவமனையில் அவரது உடலுக்கு ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.இதனைத் தொடர்ந்து ஜெ.அன்பழகனின் உடல் பாதுகாப்பாக சவப்பெட்டியில் வைக்கப்பட்டு கொரோனா நோய்த்தொற்று பரவாத அளவுக்கு பதப்படுத்தப்பட்டது. பின்னர், மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு தி.நகர் லஷ்மி தெருவிலுள்ள அவரது வீட்டிற்கு எடுத்துவரப்பட்டது. ஆம்புலன்ஸில் ஜெ.அன்பழகன் மகன் ராஜா அன்பழகன் மற்றும் சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடன் சென்றனர்.

இதனிடையே கண்ணம்மா பேட்டை மயானத்தில் ஜெ.அன்பழகன் தந்தை பழக்கடை ஜெயராமன், தாயார் கல்லறை அருகில் பொக்லைன் மூலமாக 15 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டு அவரது அடக்கத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. மயானம் இருக்கும் பகுதி முழுவதும் ப்ளீச்சிங் பவுடர் தூவி, கிருமிநாசினி தெளித்து சுகாதார முன் ஏற்பாடுகள் நடைபெற்றன.சிறிது நேரம் மட்டுமே வீட்டில் வைக்கப்பட்ட அன்பழகன் உடலுக்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதி வாசிகள் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் உடனடியாக மயானத்திற்கு கொண்டு வரப்பட்டது. கூடியிருந்த தொண்டர்கள் வீரவணக்க முழக்கங்கள் எழுப்ப, அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டி, குழிக்குள் இறக்கப்பட்டது.பாதுகாப்பு உபகரண ஆடை அணிந்திருந்த சுகாதாரத் துறை ஊழியர்கள் மட்டுமே, அவரது உடல் இருந்த சவப்பெட்டியை தொட அனுமதிக்கப்பட்டனர். சுகாதார வழிகாட்டுதல்களின்படி தொற்று பரவாத அளவுக்கு வேதிப்பொருட்கள் கொட்டி அடக்கம் நடைபெற்றது. மயானத்தின் முன்பு கூடிய திமுக தொண்டர்கள், அஞ்சலி செலுத்த முடியாததால் கண்ணீர் மல்க நின்றிருந்தனர்.

அரசின் வழிமுறைகள் காரணமாக மயானம் வருவதைத் தவிர்த்த திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அன்பழகன் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர்.

எழில்
Powered by Blogger.