ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடையில்லை!

ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஜூன் 10) மறுத்துள்ளது.


கொரோனா பாதிப்பால், தமிழகத்தில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் கிராமப் புறப் பகுதிகளில் போதிய இணைய வசதிகள் இல்லாததால், அங்குள்ள மாணவர்களால் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியவில்லை என்று புகார் எழுந்தது.



இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னையைச் சேர்ந்த சரண்யா என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ஊரடங்கு காரணமாகத் தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துகின்றன. ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் போது ஆபாச இணையதளங்களும் அவ்வப்போது குறுக்கிடுகின்றன. இதனால் மாணவர்களுக்குக் கவனச் சிதறல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, ஆபாச இணையதளங்கள் குறுக்கீடு செய்யாத வகையிலும், ஆபாச இணையதளங்களை மாணவர்கள் அணுக இயலாத வகையிலும் விதிகளை வகுக்கவேண்டும். அதுவரை ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



மேலும், 8 சதவிகித வீடுகளில் மட்டுமே இணையத்துடன் கூடிய கணினிகள் உள்ளன. இதனால் கிராமப்புற மாணவர்களால் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகும். முறையான உள்கட்டமைப்பு இல்லாததால் மாணவர்களும், ஆசிரியர்களும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று (ஜூன் 10) நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தற்போது எந்த தடையும் விதிக்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்த ஏதாவது விதிமுறைகள் உள்ளதா? என்றும் கேள்வி எழுப்பினர்.

இதற்குத் தமிழக அரசு சார்பில், பிரத்தியேக சேனல் ஒன்று இருப்பதாகவும், தற்போது கொரோனா பாதிப்பு என்பதால் அனைத்து நடைமுறைகளும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் வகுப்புகளை ஒழுங்குபடுத்த என்னென்ன விதிமுறைகள் வகுக்கப்படும் என்பதைத் தெரிவிக்க அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஜூன் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

-கவிபிரியா
Blogger இயக்குவது.