'சாஹோ' தயாரிப்பில் அனுஷ்காவின் புதிய படம்

பிரபாஸின் சாஹோ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்த யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படமொன்றில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகியுள்ளார்.தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக எப்போதும் வலம் வருபவர் அனுஷ்கா. நாயகர்களுக்கு இணையான எதிர்பார்ப்பு இவர் தேர்ந்தெடுக்கும் படங்களில் உண்டு. அருந்ததி, பாகமதி ஆகிய படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் மூலம், நாயகிகளுக்கான சினிமாவை இன்று அதிகளவில் உருவாக்க வித்திட்டவர் அனுஷ்கா. தற்போது, ஹேமந்த் மதுகர் இயக்கத்தில் அனுஷ்கா மீண்டும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் நிசப்தம். இப்படத்தில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, தணிக்கையும் செய்யப்பட்டுவிட்ட நிலையில், கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பின் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டிரெய்லருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.இப்படத்தை தொடர்ந்து, கெளதம் மேனன் இயக்கத்தில் தமிழ்ப்படத்தில் அனுஷ்கா நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனுஷ்காவின் அடுத்த படம் குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகமதி, சாஹோ போன்ற பிரம்மாண்ட படங்களை தயாரித்த நிறுவனம் யுவி கிரியேஷன்ஸ். அத்துடன் ரங்கஸ்தலம், தானா சேர்ந்த கூட்டம், பாகுபலி(1) ஆகிய படங்களை வெளியிட்ட நிறுவனங்களுள் ஒன்றாகவும் அறியப்படுகிறது யுவி கிரியேஷன்ஸ். ஏற்கனவே பாகமதி மூலம் அனுஷ்காவுடன் இணைந்த இந்த நிறுவனம் தான், தற்போது மீண்டுமொருமுறை அவருடன் கைகோர்த்திருக்கிறது.

இந்தப் படத்தை மகேஷ் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் முன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், கொரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் முறையாக அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில், யுவி கிரியேஷன்ஸ் 'பிரபாஸ் 20'படத்தையும் அதிக பொருட்செலவில் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

-முகேஷ் சுப்ரமணியம்
Powered by Blogger.