இறந்தவர்களின் உடல்களைக் கயிறு கட்டி இழுத்து சென்ற கொடூரம்!

மேற்கு வங்காள மாநிலத்தில் இறந்தவர்களின் உடல்களை அலட்சியமாக இழுத்துச் சென்றதாக சொல்லப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அம்மாநில ஆளுநர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை குழிக்குள் தள்ளிய நிலையில், டெல்லியில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில், தற்போது மேற்குவங்காள மாநிலத்தில் மற்றோர் அவலம் அரங்கேறியுள்ளது.



தெற்கு கொல்கத்தாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்ததாகக் கூறப்படுபவர்களின் உடல்களை ஊழியர் ஒருவர் கழுத்தில் கயிற்றைக் கட்டி தர இழுத்துச் சென்று அமரர் வாகனத்தில் ஏற்றும் கொடுமையான காட்சியை ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று 21 பேரின் உடல்கள் இழுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோவுக்கு மாநில ஆளுநர் ஜகதீப் தங்கர் “இறந்த மனித உடல்களை இப்படி இழிவாக நடத்துவது மனிதகுலத்தை வெட்கப்படச் செய்கிறது” என்று கூறியுள்ள அவர், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.



“அந்த உடல்கள் கொரோனா நோயாளிகளின் உடல்கள் அல்ல, மருத்துவமனை பிணவறையில் உரிமை கோரப்படாத, அடையாளம் காணப்படாத உடல்கள் என்று மேற்குவங்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலி செய்தி பரப்பும் நபர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று கொல்கத்தா காவல் துறை ட்வீட் செய்துள்ளது.

கொல்கத்தாவின் முதன்மையான அரசு மருத்துவமனைகளில் ஒன்றான என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் நகர காவல் துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் "உரிமை கோரப்படாத 14 உடல்களை கொல்கத்தா மாநகராட்சிக்கு மருத்துவமனை ஒப்படைத்துள்ளது. உடல்கள் கொரோனா வைரஸ் நோயாளிகள் உடல்கள் அல்ல; வீடியோ போலியானது, போலீசார் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.

தற்போது கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷனை நடத்திவரும் இயக்குநர்கள் குழுவின் தலைவர் ஃபிர்ஹாத் ஹக்கீம், உரிமை கோரப்படாத சடலங்கள் முன்பு தாபா தகன மைதானத்தில் தகனம் செய்யப்பட்டதாகத் தெளிவுபடுத்தியுள்ளார். ஆயினும், மே 29 முதல், தாபா தகன மைதானத்துக்குக் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது மற்றும் உரிமை கோரப்படாத உடல்கள் காரியா தகன மைதானத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன என்று கூறியுள்ளார்.

-ராஜ்

Blogger இயக்குவது.