சென்னையில் சமூக பரவலா? முதல்வர் பதில்

சென்னையில் கொரோனாவால் 25,937 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.

சேலத்தில், 5 ரோடு பகுதியை மையமாகக் கொண்டு, 441 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 7.87 கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்ட தமிழகத்தின் மிக நீளமான ஈரடுக்கு மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூன் 11) திறந்து வைத்தார்.



இதன்பின் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாநகர மக்களின் நீண்ட கால கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது சேலம் மக்கள் நகரத்துக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் எடுத்துச் சென்றேன். தற்போது பாலம் அமைக்கப்பட்டுத் திறக்கப்பட்டுள்ளது.



இந்த ஈரடக்கு மேம்பாலத்துக்கு, ஜெயலலிதாவின் நினைவாக அவரது பெயர் சூட்டப்படுகிறது. அதுபோன்று ஏவிஆர் ரவுண்டானா பாலத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படுகிறது என்று தெரிவித்தார். மேலும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கந்தம்பட்டி, ஆட்டையாம்பட்டி ஆகிய பகுதிகளில் பாலம் கட்டும் பணி நடைபெற்று நிறைவடையும் தறுவாயில் இருக்கிறது. இதுபோன்று சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் உயர் மட்ட பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். ஆத்தூர் ரயில்வே, செல்லியம்பாளையம் பகுதிகளிலும் மேம்பாலம் கட்டப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இதையடுத்து கொரோனா நிலவரம் குறித்துப் பேசிய அவர், “ தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தைக் குறைத்துக் காட்டவில்லை. இறப்பு விகிதத்தை மறைப்பதால் அரசுக்கு எந்த நன்மையும் கிடையாது. தினசரி, பாதிப்பு, இறப்பு, சோதனை ஆகிய விவரங்களைச் சுகாதாரத் துறை ஒளிவுமறைவின்றி அறிவித்து வருகிறது.

தமிழகத்தில் 6,09,856 பேருக்கு இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 36 ஆயிரமாக இருக்கிறது. ஏற்கனவே பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டு அதற்குச் சிகிச்சை எடுத்து வருபவர்களுக்குத்தான் இறப்பு அதிகமாக ஏற்படுகிறது. கொரோனாவால் மட்டும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் விகிதம் குறைவாக இருக்கிறது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள் இணைந்து படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றன. 3,384 வென்டிலேட்டர்கள் தமிழகத்தில் இருக்கிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

மேலும், சென்னையில் இதுவரை சமூக பரவல் இல்லை. மக்கள் நிறைந்த ஒரு நகரம் சென்னை. குறுகலான தெருக்கள் உள்ளன. ஆர்.கே நகர் தேர்தல் சமயத்தில் ஓட்டு கேட்க அங்குச் சென்ற போது 3அடி சந்தில் 30 வீடுகள் இருந்தது தென்பட்டது.

எந்த மருந்துமே இல்லாத, சூழ்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் என அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். சேலம் உட்படப் பல மாவட்டங்களில் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களால் தான் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது என்று குறிப்பிட்டார்.

-கவிபிரியா
Blogger இயக்குவது.