அதிகரிக்கும் கொரோனா: அமைச்சரவையைக் கூட்டும் முதல்வர்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதில் இருந்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில்தான் நாள்தோறும் 80 சதவிகித பாதிப்பு பதிவாகிறது.

நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,687ஆக அதிகரித்தது. அதில் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 30,444ஆக இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 30 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 397 ஆக அதிகரித்தது.

இவ்வாறு கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடி வருகிற 17ஆம் தேதி தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இதனால் நாளை காலை 11 மணிக்கு மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 12 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. அதில், மருத்துவக் குழுவினரின் பரிந்துரைகள் குறித்தும், கொரோனாவை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.

மேலும், கொரோனா கட்டுப்படுத்த வேண்டுமானால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் பெருமளவில் எழுந்துள்ள நிலையில், அதுதொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

எழில்
Blogger இயக்குவது.