இனி கிரிக்கெட் இப்படித்தான் நடக்கும்: ஐசிசி அறிவிப்பு!

கொரோனா வைரஸின் தாக்கத்தை கணக்கில் கொண்டு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) அதன் விளையாட்டு விதிமுறைகளில் இடைக்கால மாற்றங்களை உறுதிப்படுத்தியுள்ளது.


கொரோனாவிற்கு பிறகான கிரிக்கெட் போட்டிகளில் என்னென்ன மாற்றங்கள் செய்யலாம், எச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதைக் குறித்த முக்கியமான கூட்டம் நேற்று(ஜூன் 9) நடைபெற்றது. அதில், ஐ.சி.சி தலைமை நிர்வாகிகள் குழு (சி.இ.சி) அனில் கும்ப்ளே தலைமையிலான கிரிக்கெட் குழுவின் பரிந்துரைகளை ஒப்புதல் அளித்தது. இது கொரோனா வைரஸால் ஏற்படும் அபாயங்களைத் தணிப்பதையும், கிரிக்கெட் மீண்டும் தொடங்கும் போது வீரர்கள் மற்றும் போட்டி அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிசெய்வதையும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. ஐ.சி.சி தனது அறிக்கையில், "பந்தை வழுவழுப்பாக வைக்க உமிழ்நீரைப் பயன்படுத்த வீரர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு வீரர் பந்துக்கு உமிழ்நீரைப் பயன்படுத்தினால், நடுவர்கள் முதல்கட்டத்தில் நிலைமையை சில மென்மையான நடவடிக்கையுடன் நிர்வகிப்பார்கள். ஆனால் அடுத்தடுத்த நிகழ்வுகள் நடைபெற்றால், இதன் விளைவாக அணிக்கு எச்சரிக்கை விடப்படும்" என தெரிவித்துள்ளது.



மேலும், "ஒரு அணிக்கு ஒரு இன்னிங்ஸுக்கு இரண்டு எச்சரிக்கைகள் வரை வழங்கப்படலாம். ஆனால் பந்தில் மீண்டும் மீண்டும் உமிழ்நீரைப் பயன்படுத்துவதால் பேட்டிங் தரப்பில் 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும். பந்தில் உமிழ்நீர் பயன்படுத்தப்படும்போதெல்லாம், பந்தை சுத்தம் செய்ய நடுவர்களுக்கு அறிவுறுத்தப்படும்" என அறிக்கையில் கூறியுள்ளது. மேலும், சர்வதேச பயணங்களில் ஏற்பட்டுள்ள தற்போதைய சவால்கள் காரணமாக நடுநிலை போட்டி அதிகாரிகளை நியமிப்பதற்கான தேவை அனைத்து சர்வதேச வடிவங்களுக்கான விளையாட்டு நிலைமைகளிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படும். ஐ.சி.சி எலைட் பேனல் ஆப் மேட்ச் அதிகாரிகளிடமிருந்தும், ஐ.சி.சி இன்டர்நேஷனல் பேனல் ஆப் மேட்ச் அதிகாரிகளிடமிருந்தும் உள்நாட்டிலுள்ள மேட்ச் அதிகாரிகளை ஐ.சி.சி நியமிக்க முடியும்.



கிரிக்கெட் போட்டியில் வீரருக்கு அடிபடும் போது அவருக்குப் பதில் வேறு வீரர் பீல்டிங் செய்வார். ஆனால், அந்த வீரரால் பந்து வீசவும், பேட் செய்யவும் முடியாது. ஆனால், ஐசிசி தற்போதைய முடிவின் படி வீரருக்கு அடிபடும் பட்சத்தில் மாற்று வீரரால் பேட்டிங் மற்றும் பந்து வீசவும் முடியும். இந்த விதிமுறை கிரிக்கெட் போட்டிகளில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் இது பொருந்தாது என்று கிரிக்கெட் நிர்வாக குழு உறுதிப்படுத்தியது.

-முகேஷ் சுப்ரமணியம்
Blogger இயக்குவது.