ஐபிஎல் போட்டிகளில் இனவெறி: வெடிக்கும் சர்ச்சை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடும் போது தன்னை இனரீதியான சொற்களோடு அழைத்தனர் என்று மேற்கு இந்திய தீவுகள் அணியில் அதிரடி வீரர் டேரன் சமி புகார் எழுப்பியதையடுத்து கிரிக்கெட் உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.


ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்தையடுத்து, உலகெங்கும் இனரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஹாலிவுட் சினிமாக்களில், கால்பந்து, கிரிக்கெட் என பலதுறைகளைச் சேர்ந்த வல்லுநர்களும் இனரீதியாக தாங்கள் அடைந்த வேதனையடுந்த அனுபவங்களை பகிரத்துவங்கினர். சமீபத்தில் கிறிஸ் கெயில் கூட இதோ போன்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். இதனையடுத்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் போது, தன்னை இனரீதியான மோசமான வார்த்தைகளை கொண்ட் அழைத்தனர் என டேரன் சமி தற்போது தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து டேரன் சமி கூறியதாவது, "நான் உலகில் பல்வேறு இடங்களில் ஆடியுள்ளேன். அனைவரின் விருப்பத்துக்குரிய வீரராகவும் இருந்துள்ளேன். ஆனால் ஹசன் மின்ஹாஜ் என்பவரின் நிகழ்ச்சியைப் பார்த்த போது அவர் தங்கள் பண்பாட்டில் கருப்பர்களை எப்படி அழைப்பார்கள் என்பதை கூறினார். அவர் கூறியதைக் கேட்ட பிறகு எனக்கு கோபம் வந்தது. கருப்பு மக்களை வர்ணிக்கும் சொல்லை அவர் கூறிய போது, நல்ல வழியில் பயன்படுத்தவில்லை என்பதை அவர் கூறிய விதத்தை வைத்துப் புரிந்து கொண்டேன். அது இழிசொல்லாகும், அவமதிப்புச் சொல்லாகும் இழிவு படுத்தும் சொல்லாகும். உடனேயே எனக்கு 2013, 2014 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆடும்போது என்னை நோக்கி, பெரேராவை(இலங்கை வீரர்) நோக்கி இதே சொல்லைத்தான் இழிசொல்லாகப் பயன்படுத்தினார்கள் என்பது எனக்கு உடனே பொறி தட்டியது. அந்தச் சொல் எங்களை, கருப்பினத்தவரை இழிவுபடுத்தும் சொல்லாகும்.



என்னை நோக்கி இந்த வார்த்தையைப் பயன்படுத்தியவர்களுக்கு நான் குறுஞ்செய்தி அனுப்பி வருகிறேன். அது யார் யார் என்பது உங்களுக்கே தெரியும். நீங்கள் என்னை அப்படி அழைத்த போது அதன் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் என்னையும் திசரா பெரேராவையும் அந்தப் பெயர் சொல்லி அழைக்கும் போது அங்கு பெரிய சிரிப்பலை எழும். நான் அணி வீரராக ‘அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள், எனவே அது ஏதோ ஜோக்’ என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது ஜோக் அல்ல, கேளிக்கை அல்ல என்று எனக்குத் தெரியவந்த போது எனக்கு ஏற்பட்ட உணர்ச்சியை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அது கேளிக்கை அல்ல, இழிசொல்.



அது ஏதோ என் இன்னொரு பெயர் என்று நான் நினைக்கும் அளவுக்கு அவ்வளவு முறை அழைத்துள்ளீர்கள். நீங்கள் என்னை இழிவு படுத்தும் நோக்கத்துடன் அப்படி அழைத்தீர்களா? ஏனெனில் இது எனக்கு முக்கியமானது. நான் கூறியது போல் எல்லா ஓய்வறையிலும் எனக்கு நிறைய நினைவுகள் உள்ளன. ஒரு டி20 வீரனாக, ஓய்வறையில் ஒரு கேப்டனாக... உங்களில் சிலரிடம் என் தொலைபேசியும் உள்ளது. இன்ஸ்டாகிராமில் என்னை நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்; டிவிட்டரில் தொடர்பு கொள்ள முடியும். எப்படியோ நாம் உரையாடுவோம். மின்ஹாஜ் கூறிய அந்த இழிசொல்லாக நீங்கள் பிரயோகப்படுத்தியிருந்தால் நிச்சயம் ஏமாற்றமே. நான் கோபமாகவே இருக்கிறேன், உங்களிடமிருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறேன். உங்கள் அனைவரையும் என் சகோதரர்களாகவே நான் நினைத்துப் பழகினேன். எனவே என்னிடம் பேசுங்கள், இல்லையெனில் உங்கள் பெயர்களை அழைக்கத் தொடங்குவேன். என்னைத் தொடர்பு கொள்ளுங்கள், பிரச்சினையைத் தீருங்கள்” எனப் பேசியுள்ளார் டேரன் சமி.



இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளிப்படைந்தனர். இந்நிலையில், 2014ஆம் ஆண்டில், இஷாந்த் சர்மாவின் புகைப்படத்தில் சமி இருப்பதை பார்த்த நெட்டிசங்கள், அதில் குறிப்பிட்டுள்ள பெயர்களை கொண்டு இஷாந்த் சர்மாவும் சமியை இனரீதியாக அவமரியாதை செலுத்தியுள்ளார் என விமர்சித்து வருகின்றனர். இஷாந்தின் அந்தப் பதிவில், “நான், புவி, கலூ, மற்றும் கன் ரைசர்ஸ்” என்று குறிப்பிட்டு பகிர்ந்த புகைப்படத்தில் இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், டேல் ஸ்டெய்ன், இடையே நிற்கும் டேரன் சமியை kaluu என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வார்த்தை கருப்பு நிறம் கொண்டவர்களை குறிக்கும் வார்த்தையாகும். 2014 ஐபிஎல் தொடரில் இஷாந்த் சர்மா, டேரன் சமி இருவரும் சன் ரைசர்ஸ் அணிக்கு ஆடியது குறிப்பிடத்தக்கது.

இஷாந்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு சன்ரைசர்ஸ் நிர்வாகத்தையும் பி.சி.சி.ஐ யையும் ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

-முகேஷ் சுப்ரமணியம்
Blogger இயக்குவது.