பொலிஸாரின் விசேட சோதனை நடவடிக்கையில் 34,489 பேர் கைது!!
நாடளாவிய ரீதியில் கடந்த 18 நாட்களாக பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 34 ஆயிரத்து 489 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதன்போது போதைப் பொருட்கள் , சட்டவிரோத மதுபானம் , மற்றும் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அதற்கமைய கடந்த 6 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை ஆறு மணிமுதல் நேற்று புதன்கிழமை நள்ளிரவு 12 மணிவரை சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , இதன்போதே குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது போதைப் பொருள் வைத்திருந்தமை தொடர்பில் 8,461 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுள் 4,734 பேர் ஹெரோயின் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 7 கிலோ 331 கிராம் 763 மில்லி கிராம் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சா போதைப் பொருளுடன் 3,397 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 284 கிலோ 20 கிராம் 877 மில்லிகிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடனும் 330 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 835 கிராம் 745 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபானம் தொடர்பிலும் சுற்றிவளைப்புகள் இடம்பெற்றுள்ளதுடன் , 7,150 சந்தேக நபர்களிடமிருந்து மூன்று இலட்சத்து 79 ஆயிரத்து 711 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வெத்திருந்தமை தொடர்பில் 74 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , ஆயுதங்கள் வைத்திருந்ததாக 65 பேரும் , வெடிமருந்துகளை வைத்திருந்ததாக ஒன்பது பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 21 குழல் 12 ரக துப்பாக்கிகளும் , 26 கல்கட்டஸ் ரக துப்பாக்கிகளும் , 23 ரிபிடர் ரக துப்பாக்கிகளும், 9 புதியவகை துப்பாக்கிகளும், பிஸ்டோல் மூன்றும்; 51 தன்னியக்க தோட்டாக்களும் மற்றும் மூன்று வாள்களும், கத்தி இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை 367 கிராம் தொகை வெடி மருந்து , 23 டெட்டனேட்டர்கள் மற்றும் 10 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 6,750 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேற்கூறிய குற்றச் செயல்களுக்குள் உள்ளடங்காத வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்தமை தொடர்பிலும் 12 ஆயிரத்து 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதன் நோக்கிலே பொலிஸார் இந்த விசேட சுற்றிவளைப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை போதைப் பொருள் கடத்தல் ஊடாக சேர்த்துவைக்கப்பட்டுள்ள சொத்துக்களை அரசுடமையாக்குவதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo