கார்கில் கேர்ள்: உண்மைக்கதையில் ஸ்ரீதேவி மகள்!

கார்கில் போரில் பெண் விமானியாக பணியாற்றிய லெப்டினன்ட் குஞ்சன் சக்சேனாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படத்தில் ஜான்வி கபூர் கதைநாயகியாக நடித்துள்ளார்.


விமானியான குஞ்சன் சக்சேனா கார்கில் போரின் போது, லெப்டினன்ட் ஸ்ரீவித்யா ராஜனுடன் சேர்ந்து பணியாற்றினார். கார்கில் போரின் போது போரில் ஈடுபட்ட முதல் இந்திய பெண்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றனர். இரண்டு விமானிகளும் சீட்டா ஹெலிகாப்டர்களில் உளவுத்துறைக்காகவும், பாதிப்படைந்தவர்களை மீட்பதற்காகவும் பறந்தனர். அதற்காக அவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் எல்லைகளுக்கு மிக அருகில் பறந்தனர். இந்திய விமானப்படையில் பெண்கள் போர் விமானிகளாக நியமிக்கப்படுவதற்கு முன்பே இந்த நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில், ஸ்ரீதேவியின் மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் தனது சமீபத்திய திரைப்படமான 'குஞ்சன் சக்சேனா தி கார்கில் கேர்ள்' மூலம் குஞ்சன் சக்சேனாவின் கதையை திரைக்கு கொண்டு வர உள்ளார். ஷரன் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் ஜான்வி கபூர் குஞ்சன் சக்சேனா வேடத்தில் நடிக்கிறார். மேலும் பங்கஜ் திரிபாதி, அங்கத் பேடி, வினீத் குமார், மனவ் விஜ் மற்றும் ஆயிஷா ராசா ஆகியோரும் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் சிறிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

தர்மா புரொடக்ஷன்ஸ் சார்பில், இப்படத்தை தயாரித்த கரண் ஜோஹர் கூறும் போது, "குஞ்சன் சக்சேனா இணையற்ற தைரியத்தையும், வரும் ஆண்டுகளில் பலருக்கும் உத்வேகத்தையும் அளிக்கக்கூடிய ஒரு பெண்ணைப் பற்றிய உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்ட படம். நெட்ஃபிளிக்ஸ் உடன் இப்படத்தில் இணைந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்" எனக் கூறியுள்ளார்.
-முகேஷ் சுப்ரமணியம்
Blogger இயக்குவது.