சென்னையில் முழு ஊரடங்கு?

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதிலளித்துள்ளார்.



கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு 1000த்துக்கும் அதிகமாகப் பதிவாகி வருகிறது. தமிழகம் முழுவதும் 33,229 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 23,298 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.



இந்த நிலையில் சென்னை அயனாவரத்தில் கொரோனா தடுப்புப் பணிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் உதயகுமார், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் ஆகியோர் இன்று (ஜூன் 9) ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், “கொரோனாவை தடுப்பதற்காக வீதி வீதியாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மற்ற மாவட்டங்கள், மாநகரங்களை ஒப்பிடும்போது தனி மனித இடைவெளி என்பது சென்னையில் மிகுந்த சவால் நிறைந்ததாகவே உள்ளது. கொரோனா தொற்றின் வீரியம் குறித்து மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.



நியூசிலாந்தில் ஒருவருக்குக் கூட கொரோனா தொற்று இல்லை என்று அந்நாட்டு பிரதமர் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். நியூசிலாந்து மக்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு அளித்ததால் இந்த நிலை வந்துள்ளது. அதுபோல சென்னையும் கொரோனா தொற்று இல்லாத நகரமாக மாறும். பொதுமக்கள் தாமாக முன்வந்து ஒத்துழைப்பு அளித்தால் அது சாத்தியப்படும்” என்று தெரிவித்தார்.



கொரோனா பாதிப்பு அதிகமாவதால் சென்னையில் முழு ஊரடங்கு அல்லது முழுமையான கட்டுப்பாடு அமல்படுத்தப்படுமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவு 78 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. சென்னையில் ஐந்தாவது முறையாக 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில், அத்தியாவசியமாக தேவைப்படும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்காக அளிக்கப்பட்டுள்ள வழிகாட்டு முறைகளை பொதுமக்கள் அவசியமாக கடைபிடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

எழில்
Blogger இயக்குவது.