சட்டமன்றத்தில் சண்டமாருதமாய் முழங்கியவர்: வைகோ புகழாரம்

அன்பழகன் மறைவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.



கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் இன்று (ஜூன் 10) உயிரிழந்தார். இந்தியாவிலேயே மக்கள் பிரதிநிதி ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தது இதுதான் முதல்முறை. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “ஒன்றிணைவோம் வா” என்று ஸ்டாலின் விடுத்த அழைப்பினை ஏற்று, உயிருக்கே ஆபத்து நேரிடக்கூடும் என்பதை மறைத்து, கொரோனா நிவாரணப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர், மலை குலைந்தாலும் நிலை குலையாத மாவீரன் ஜெ.அன்பழகன், அடக்குமுறைகளுக்கு அஞ்சாத சூரன், தலைவரின் கட்டளை என்றால், கணப் பொழுதில் உயிரையும் பணயம் வைக்கும் உத்தமத் தொண்டன் ஆவார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

நெற்றிக் கண் காட்டினும் குற்றம் குற்றமே என்று பகைவர் கூட்டத்தை எச்சரிப்பவர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் சண்டமாருதமாய் முழங்கியவர் ஜெ.அன்பழகன் என்று புகழாரம் சூட்டியதோடு, “1993 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெ.அன்பழகன் அன்றைய திமுக இளைஞர் அணிச் செயலாளர் தளபதி ஸ்டாலினையும், என்னையும் வைத்து, எம்.ஜி.ஆர். நகரில் கொட்டிய மழைக்கு நடுவே பொதுக்கூட்டத்தை நடத்தி, எங்கள் இருவருக்கும் தங்கக் கணையாழி அணிவித்தார்” என்று தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளார்.

மேலும், “கட்சியின் புகழ் ஓங்குவதற்கான பணியில் தன்னை ஈடுபடுத்தியவாறு உயிர் நீத்ததன் மூலம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாக வரலாற்றில் அழியாத புகழ் இடத்தைப் பெற்றுவிட்டார் அன்பழகன்.இந்தக் கொடுந்துயரைத் தாங்க முடியாமல் திமுக தலைவர் தவிக்கின்றார். அவருக்கும், அன்பழகன் அவர்களின் குடும்பத்தினருக்கும், திமுக கண்மணிகளுக்கும் ஆறுதல் தேறுதல் கூற முடியாது என்ற நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவிக்கின்றேன்” என்றும் இரங்கல் தெரிவித்துள்ளார் வைகோ.

எழில்
Blogger இயக்குவது.