கொரோனா பிசாசுத்தனமான அசுர அடி: ரஜினிகாந்த்

தமிழகத்தின் அரசியல் தலை எழுத்தை மாற்ற வேண்டும் என இளைஞர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் வேண்டுகோள் விடுத்தார் ரஜினிகாந்த்.


போகிறபோக்கில் அவ்வப்போது அரசியல் பேசி எல்லோரையும் குழப்பிவிட்டு ஊடகங்களின் மாலை நேர விவாதங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து தன்னை சுற்றி எப்போதும் ஊடக வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொண்டார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மார்ச் 31 அன்று ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் ரஜினி பொதுவெளியில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அவர் அளித்த உணவுப்பொருட்களை வழங்குவதில் தயாரிப்பாளர்கள் மத்தியில் ஏற்பட்ட வாக்குவாதம், ரஜினிக்கு எதிராக சில தயாரிப்பாளர்கள் தெரிவித்த கருத்துகள் தொலைக்காட்சிகளில் இரண்டு நாட்கள் இடைவிடாது ஒளிபரப்பான போது கூட ரஜினி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.தமிழகத்தில் மதுபானக் கடைகளை திறக்க தமிழக அரசு எடுத்த முடிவுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தபோது, நடிகர் கமல்ஹாசன் அரசின் முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தன் இருப்பை உறுதிப்படுத்த மதுக்கடைகளை திறப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ட்விட்டரில் கருத்து தெரிவித்தார் ரஜினி. கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு பிரச்சாரம், நிவாரண உதவிகளை அரசும், அரசியல் கட்சிகளும் செய்துகொண்டிருந்தபோது, தமிழகத்தின் அடுத்த முதல்வர் என கூறப்பட்டு வந்த ரஜினிகாந்த் பங்களிப்பு எதுவும் செய்யாது வீட்டை விட்டு வெளியில் வரவில்லை.ஊடகங்களும் அவரை மறந்துபோன நிலையில் திடீர் என நேற்று(ஜூன் 9) தனது ரசிகர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.அடிபட்ட உடனேயே வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல வல்லரசு நாடுகளையும் கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத் தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில் பலவிதங்களில் நமக்குப் பல கடுமையான வேதனைகளைத் தரும்.

உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பது தான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் முக கவசத்தை அணியாமலும் இருக்காதீர்கள். ஆரோக்கியம் போச்சுண்ணா வாழ்க்கையே போச்சு” என குறிப்பிட்டுள்ளார்.

-இராமானுஜம்
Powered by Blogger.