உலகம் நிறமிழந்து போனதாய் நெஞ்சுடைகிறேன்: வைரமுத்து

இயக்குநர் பாரதிராஜாவுடன் 40 ஆண்டுக் காலம் இணைந்து பணியாற்றிய பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணனின் மறைவு குறித்து திரை பிரபலங்கள் பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.


பாரதிராஜாவின் மிக நெருங்கிய நண்பராக இருந்த ஒளிப்பதிவாளர் கண்ணன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (ஜூன் 13) மரணமடைந்தார். பிரபல இயக்குநர் பீம்சிங்கின் மகனும் முன்னணி எடிட்டர் லெனினின் சகோதரருமான கண்ணன், பாரதிராஜாவுடன் இணைந்து 40 திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.



அவரது மரணம் குறித்து கவிஞர் வைரமுத்து அவரது சமூக வலைதளப் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.



அந்தப் பதிவில், “பாரதிராஜாவின் மனக்கண்ணாகவும் கலைக்கண்ணாகவும் விளங்கியவர் பி.கண்ணன். என் முதல் பாடலான பொன்மாலைப் பொழுதுக்குத் தங்கம் பூசியவர். தேசிய விருது பெற்ற என் ஏழு பாடல்களில் இரண்டு பாடல்களை ஒளிபெயர்த்தவர். குணவான் ஆகிய கனவான். அவர் மறைவால் இந்த உலகம் ஒரு கணம் நிறமிழந்து போனதாய் நெஞ்சுடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கதாசிரியரும் இயக்குநருமான ஆர்.செல்வராஜ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “கனவு கண்ட கதைகளை உயிரோவியமாக்கிய அன்பு நண்பர் பி.கண்ணன் அவர்கள் மறைவு கண்ணீரில் எழுதும் கதையாகி விட்டது. மறக்கவில்லை. நீங்கள் மறுபடியும் பிறந்து வாருங்கள் கண்ணா” என்று எழுதியுள்ளார்.



தனது துணைவியாரை விடவும் தான் வாழ்வில் அதிகமாக நேசித்த தனது நண்பனின் உடலை, இறுதியாக ஒருமுறை பார்க்கக் கூட இயலாத சோகத்தை வெளிப்படுத்தி இயக்குநர் பாரதிராஜா நேற்று வீடியோ வெளியிட்டிருந்தார்.

ஒளிப்பதிவாளர் கண்ணனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பனின் பிரிவால் வருந்தும் இயக்குநர் பாரதிராஜாவுக்கும் பல்வேறு திரைப் பிரபலங்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

-இரா.பி.சுமி கிருஷ்ணா
Blogger இயக்குவது.