கொரோனா: சென்னையில் மேலும் 2,000 செவிலியர்கள் நியமனம்!

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்காக மேலும் 2,000 செவிலியர்களை தமிழக அரசு தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்துள்ளது.


கொரோனா நோய்த் தொற்றுக்கு மேற்கொண்டு வரும் சிகிச்சை முறைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் சுகாதாரத் துறை மூலம் ஏற்கனவே 530 டாக்டர்கள், 4, 893 செவிலியர்கள், 1,508 ஆய்வக நுட்புனர்கள், 2, 715 சுகாதார ஆய்வாளர்களைப் பணியில் அமர்த்த முதலமைச்சர் உத்தரவிட்டார்.



அதன்படி இந்தப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். மேலும், ஒப்பந்த அடிப்படையில் 574 அரசு பணியில் அல்லாத முதுநிலை மருத்துவ மாணவர்கள், 665 டாக்டர்கள், 365 ஆய்வக நுட்புனர்கள், 1,230 பல்நோக்கு சுகாதாரப் பணியாளர்கள் சில தினங்களுக்கு முன் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் மனிதவள மேம்பாட்டை வலுப்படுத்தும் விதமாக முதலமைச்சர் உத்தரவுக்கு இணங்க சென்னையில் பணிபுரியும் வகையில் மேலும் 2,000 செவிலியர்களை ஆறு மாத காலத்துக்குத் தற்காலிகமாக நியமித்து பணி நியமன ஆணைகள் நேற்று (ஜூன் 13) வழங்கப்பட்டது. இவர்கள் உடனடியாக பணியில் சேர தொடங்கியுள்ளனர்.

இவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.14,000 ஊதியமாக வழங்கப்படும். தங்கும் இடம், உணவு ஆகியவற்றுக்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும். இந்த மனிதவள மேம்பாட்டுப் பணிகள் மூலம் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் கொரோனா தடுப்பு மற்றும் மேலாண்மைப் பணிகள் மேலும் வலுவடையும்.

ராஜ்
Blogger இயக்குவது.