கருணா திடீர் பல்டி!!

அண்மையில் என்னால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக கதைப்பதற்கு சஜித் பிரேமதாசாவுக்கோ அல்லது அனுரகுமார திசாநாயக்கவுக்கோ எந்த விதமான அருகதையும் கிடையாது.


ஏனெனில் சஜித் பிரேமதாசவின் தந்தையார் ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது ஆயிரக்கணக்கான துப்பாக்கிகளையும் ஒரு கோடிக்கும் அதிகமான தோட்டாக்களையும் விடுதலைப் புலிகளுக்கு வழங்கி விடுதலைப்புலிகளை ஊக்குவித்தவர்.

அதேபோன்று அநுரகுமார திசாநாயக்க மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) இயக்கத்தினர் சுமார் 80,000 சிங்கள மக்களை கொன்று குவித்தவர்கள்.

இவர்கள் இருவருக்கும் நான் தெரிவித்த கருத்து தொடர்பாக பேசுவதற்கு எந்த விதத்திலும் அருகதை கிடையாது என்று கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

அண்மையில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் கொடிய கொரோனாவை விடவும் கருணா கொடியவன் என்று விமர்சித்து இருந்தமைக்கு பதிலளிக்கையிலேயே கருணா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

'கொரோனா இலங்கையில் இதுவரை பதினொரு (11) பேரைக் கொன்றது. ஆனால் நான் அதனை விடவும் கொடியவன். ஒரே இரவில் ஆனையிறவு யுத்தத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களைக் கொன்றவன் இன்னும் எத்தனையோ போராட்டங்களில் பல உயிர்களை காவு கொண்டவன் நான் என்று கூறியிருந்தார்' அதற்கு தற்போது தென்பகுதியில் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

உண்மையில் நான் வேண்டும் என்று அந்தக் கருத்தைக் கூறவில்லை. எனது தேர்தல் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஒரு நல்ல நோக்கத்திற்காக மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக நான் தெரிவித்த கருத்து அது.

உண்மையில் யுத்தத்தில் இரு தரப்புமே இழப்புகளை சந்தித்தது. பாதுகாப்பு படையினரும் இறந்தனர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் இறந்தனர்.

அதில் ஒளித்து மறைக்க ஒன்றுமில்லை. அவ்வாறான கொடிய யுத்தத்தை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வந்தது தொடர்பாகவே நான் கருத்தினைக் கூற முற்பட்டேன். என்னை ஹீரோவாக காட்ட முற்படவில்லை. நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானம் நிலைக்க வேண்டும்.

கொடிய யுத்தம் இடம்பெற்றால் அழிவுகளும் இடம்பெற்றது.இதனால் இருதரப்பும் பல இழப்புக்களை சந்திக்கும் என்பதை சுட்டிக்காட்டியதாகவே எனது உரை இருந்தது.

ஆனால் அவ்வுரையை திரிபுபடுத்துகிறார்கள். அத்தகைய கொடிய போராட்டத்திலிருந்து ஜனநாயக வழிக்குத் திரும்பி என்னை இன்று விமர்சிக்க முற்படுகிறார்கள். கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நான் ஜனநாயக வழிக்குத் திரும்பி அரசியல் கட்சியை ஆரம்பித்து பாராளுமன்றத்தில் அங்கம் வகித்தவன்.

அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது தென்னிலங்கையில் தாங்கள் சிங்கள வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக என்னை விமர்சித்து, தமது தேவையை நிறைவேற்ற சிலர் முனைகின்றார்கள்.

அவர்களைப் பற்றி நான் ஒருபோதும் கவலைப்படப் போவதில்லை. ஏனெனில் உண்மை என்னவென்று, கருணா யார் என்பது, எப்படிப்பட்டவன் என தெரிய வேண்டியவர்களுக்கு நன்கு தெரியும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் என்னை பற்றி நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இந்த நாட்டை ஆளுகின்ற ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு கருணா யார் என்பது நன்கு தெரியும்.

அதனால் வெறுமனே வாக்குகளை பெறுவதற்காக சிலர் சில்லறைத்தனமான அறிக்கைகளை விட்டு வருவது வேடிக்கையாக இருக்கிறது.

மீண்டும் சொல்கிறேன், இதைபற்றி நான் ஒருபோதும் அலட்டிக்கொள்ள போவதில்லை என்றார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.