சட்டத்தரணியை அச்சுறுத்தியவருக்கு விளக்கமறியல்!

முகநூல் ஊடாக சட்டத்தரணியின் கடமையினை சுதந்திரமாக செய்யவிடாமல் அச்சுறுத்தும் விதமாக பதிவுகளை பதிவேற்றிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை எதிர்வரும்-19 ஆம் திகதி வரை விளக்க மறியல் வைக்குமாறு மன்னார் நீதவான் மா.கணேஷராஜா உத்தரவிட்டுள்ளார்.


மன்னார் தனியார் வாடகை வாகன உரிமையாளர் சங்கத்தினரால் தங்களுக்கு வாகனத்தரிப்பிடம் ஒன்று வேண்டுமென்று மன்னார் நகரசபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் குறித்த வழக்கினை சிரேஷ்ட சட்டத்தரணி பா.டெனிஸ்வரன் அவர்கள் வாதாடியிருந்தார்.

இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில் குறித்த வழக்கு இணக்கமாகத் தீர்க்கப்பட்டு கைவாங்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் வழக்கு நிலுவையிலிருந்த காலப் பகுதியில் மேற்படி போலி முகநூல் ஊடாகவும், இன்னும் ஒருசில முகநூல்கள் ஊடாகவும் குறித்த சட்டத்தரணிக்கு அவதூறு ஏற்படுத்தும் விதமாகவும், அச்சுறுத்தும் விதமாகவும் பல்வேறு பதிவுகள் பதிவேற்றப்பட்டிருந்தது.

இதனையடுத்து அத்ற்கு எதிராகப் பா.டெனிஸ்வரன் அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் பொருட்டே மேற்படி சந்தேக நபர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக பா.டெனிஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போது முகநூல் ஊடாகப் பல்வேறு நன்மையான விடயங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக கல்வி, மருத்துவம், சட்டம், மற்றும் அறிவியல் சார்ந்த பல ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன. இருந்த போதும் ஒரு சிலர் முகநூலைப் பிழையாகப் பயன்படுத்துகின்றனர். அவதூறான வார்த்தைப்பிரயோகங்கள், இரு சமூகங்களைப் பிளவுபடுத்துவது போன்ற பதிவுகள், மற்றும் மதத் துவேசத்தை உண்டு பண்ணுகின்ற பதிவுகள் போடப்படுகின்றன. இது எதிர்காலத்தில் எமது சமூகத்தை சீரழிக்கும் விடயமாக இருக்கப் போகின்றது. எனவே இதனை, நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும்.

முகநூலைப் பிழையாகப் பயன்படுத்தினால், தண்டனை மற்றும் நஷ்ட ஈடு கொடுக்க நேரிடும் என்ற விழிப்புணர்வு மக்களுக்குச் சென்றடைய வேண்டும். இதற்கான ஒரு நடவடிக்கையே இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த வழக்குத் தொடர்பில் இன்னும் சிலபேர் கைது செய்யப்படலாம் என்ற நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.