புழுதி - பாகம் 10!!

எண்ணங்களே செயல்கள் ஆகிறது என்றும் அந்த செயல்களே பின்னர் வாழ்க்கை ஆகிறது என்றும் அப்பா அடிக்கடி சொல்வார். ஒப்பற்ற தியாகங்கள் உன்னதமான வாழ்க்கையின் உயிர்நாடி என்பதை நாங்கள் சிறுவயது முதல் பார்த்துப் பழகியிருந்தோம். 


நாட்கள் உருண்டோடி நகர்ந்துகொண்டிருந்தன, பதினாறு வயதைத் தொட்டுக்கொண்டிருந்தேன்.....அப்போதெல்லாம், மின்சார வசதி கிடையாது, குப்பி விளக்குதான். அதிலும் ஜாம் போத்தலின் அடியில் சிறு பஞ்சு துண்டை வைத்து சிறிய அளவில் மண்ணெண்ணெய் விட்டு அதன் மேலே சைக்கிளின் வார்க்கட்டையில் திரிவைத்து விளக்கெரிப்பது தான் வழமை.

மெல்லிய அந்த வெளிச்சத்தில் தான் எங்கள் கல்வியின் கனவுகள் பூத்துக் குலங்கின. அந்த வெளிச்சம் போதாது என்றால் கைவிளக்கில் தான் படிப்பது. சிம்னி லாம்பு கூட ஓரிருவர் வீட்டில்தான்.......

அன்றும்......அதிகாலையிலேயே அம்மாவின் குரல் அருகில்......"அன்பு....அன்பு.....எழும்பையா....அண்ணா எழும்பி படிக்கிறான், நீயும் எழம்பி படி"
அதிகாலையில் வீசுகின்ற காற்றும் சூரியோதய வாசனையும் உடம்பிற்கு புத்துணர்ச்சி தருவது என அம்மா அடிக்கடி சொல்வார். அந்த நேரத்தில் கற்கின்ற பாடங்கள் மனதில் பதியும் என்றும் சிறப்பான சிந்தனைகள் மனதில் உதயமாகும் என்றும் அப்பா சொல்வார்.
நானும் எப்போதாவது அதிகாலையில் சில கவிதைகளை கோர்த்ததுண்டு....

அம்மா, அதிகாலை ஐந்து மணிக்கு முன்னரே தானும் எழுந்து எங்களையும் எழுப்பிவிடுவா,
தங்கை குயிலி மட்டும் அம்மா எழுப்ப, மெல்ல எழுந்து அப்பாவிடம் சென்று மீண்டும் படுத்துவிடுவாள். அம்மா சத்தம்போட்டு உலுக்கினால் 'சரி அவள் படுக்கட்டும் விடு' என்றுவிடுவார் அப்பா.

"நல்லா செல்லம் குடுத்து  உதவாமல் ஆக்குங்கோ" என்றபடி நகர்ந்துவிடுவார் அம்மா. அண்ணாவிற்கும் எனக்கும் பிறகு கடைக்குட்டியாய் பிறந்தவள் அவள். எட்டு வயதான அவளிடம் யாருமே கோபத்தைக் காட்டியதில்லை, எல்லோரிடமும் ஒதுங்கி நடக்கும் நான் கூட அவளிடம் அப்படி நடப்பதில்லை. அம்மா மட்டும்தான் அவளிடம் கண்டிப்பு காட்டுவது, அதுவும் எல்லோருமே செல்லம் குடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே......

அன்று சனிக்கிழமை, சீராளனும் வானகனும் கோமகனும் காலையிலேயே வீட்டிற்கு வந்துவிட, நால்வருமாக பின்பக்கம் இருந்த கொய்யா மரத்தின் கிளைகளில் ஏறியிருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். கொஞ்ச நேரத்தில்,  ' 'பாட்டுக் கேப்பமடா' என்றார்கள்.

சரி என்றபடி கீழே இறங்கிவந்து சைக்கிளை தலைகீழாக நிறுத்திவிட்டு வானகன், சுற்றத் தொடங்கினான். ரேப்பில் பாட்டை ஓடவிட்டேன்.
சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா...ஆ...ஆ...ஆ...
என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கியது.....மௌனமாய் கேட்டுக் கொண்டிருந்தோம்.

இளையராஜாவின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், எனக்கு பிடித்த எதையும் தமக்குப் பிடித்ததாக மாற்றிக்கொள்வது என் நண்பர்களின் குணம், அதனால்தான் என் நண்பர்களின் யாருக்காவது ஏதாவது துன்பம் என்றால் நான் எதைப்பற்றியும் யோசிக்காமல் முரட்டுத்தனமாக மாறிவிடுவேன்.

கோபிகை


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.