புழுதி - பாகம் 12!!மாலைச்சூரியன் தகதகவென ஜொலித்தபடி கூடடைந்து கொண்டிருந்தான். தோட்ட வேலைக்குச் சென்றவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர், ஆட்டுக்கு குழை வெட்டிவிட்டு சோளக்கதிரோடு அம்மம்மாவும்  வந்துகொண்டிருந்தா. தூரத்தில் என்னைக் கண்டதும் அந்த வயோதிப முகத்தில் வந்த சிரிப்பு....'கோடி கொடுத்தாலும் கிட்டாத செல்வம் அது' என்றே எனக்குத் தோன்றியது. 


போகிற வழியில் மாமா வீடு இருந்தது. மாமாவின் மகன் கதிருக்கு என்னுடைய வயது தான். நாங்கள் நல்ல நண்பர்கள். அவனையும் கூட்டிவருவதாகச் சொல்லி அம்மம்மாவை அனுப்பிவிட்டு நாங்கள் நால்வரும் மாமா வீட்டிற்குச் சென்றுவிட்டோம். 

நாங்கள் போகும் போதே வாசலில் மதுவந்தி நிற்பதைக் கண்டுவிட்டோம். மெல்லிய இருள் சூழ்ந்த அந்த கருக்கல் பொழுதில் உருவம் சரியாக தெரியாவிட்டாலும் வரிவடிவமாய் அவளுடைய தோற்றம் அவள்தான் என்பதைக் காட்டியது.
என்னை அவள் காணவில்லை போலும், தோழிகளோடு கதைத்துக் கொண்டு நின்றிருந்தாள். விசுவமடு குளக்கட்டுக்கு அருகில்தான் மாமி வீடு இருந்தது. குளத்திலிருந்து வருகின்ற வாய்க்கால் தண்ணீர் அவர்களுடைய படலை வாசலோடு ஓடிக்கொண்டிருக்கும். வாய்க்காலை மறித்து போடப்பட்டிருந்த சீமெந்து பிளாற்றில் அமர்ந்து கால்களை தண்ணீரில் ஆட்டியபடி கதைத்துக்கொண்டிருந்தவள், எங்கள் சைக்கிளைக் கண்டதும் எழுந்து நின்றுகொண்டாள்.

எல்லோரும் போய்விட கடைசியாக நான் அவளைக் கடந்தபோதுதான், என்னை அடையாளம் கண்டிருக்கவேண்டும், அருகில் நின்ற தோழியிடம் ஏதோ கிசுகிசுப்பாய் சொல்லியபடி மெல்லச் சிரித்தவளின் சிரிப்பொலி என்னுடைய காதுகளிலும் விழத்தான் செய்தது.

நான் திரும்பிப் பார்க்கவில்லை, 'எப்பிடி தெரியாத மாதிரி போகுது பார், சரியான முசுடு' இப்போது அவள் சொன்னது தெளிவாக எனக்கும் கேட்டது. சீராளன் ஏதோ சொல்ல வாய் எடுக்க, நான் அவனை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டேன்.

அடிக்கடி அவளை நான் காண்பதில்லை, நீண்ட நாட்களின் பின்னர் கண்டதால் அவள் வளர்ந்துவிட்டாள் என்பது தெரிந்தது. அப்போதெல்லாம் மாமா மகள், மாமி மகள் என்றால் வயது பொருத்தத்திற்கேற்றபடி யாராவது ஒருவரை பட்டப்பெயர் சொல்லி அழைப்பது வழமையான ஒன்று. எனக்கும் மதுவந்திக்குமான முடிச்சு அப்படித்தான் விழுந்தது.

நான் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை என்பதால் எனக்கு முன்னால் சொல்வது இல்லையே தவிர, பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகள் எனக்கு தெரியாமல் மதுவந்திக்கு என்னுடைய பெயரைச் சொல்லி கேலி செய்வதுண்டு,

மதுவந்தி அம்மாவின் அண்ணன் மகள், அப்பாவின் தங்கை மகளான ஆரணியை அண்ணாவிற்கு சொல்வதுண்டு. நான், ஆரணி, மதுவந்தி எல்லோரும் ஒரே வயதுடையவர்கள். அண்ணாவிற்கும் ஆரணி என்றால் விருப்பம்தான்.....

தொடரும்
கோபிகைBlogger இயக்குவது.