ஏ.ஆர்.ரஹ்மான் பாராட்டையும் பரிசையும் பெற்ற மாற்றுத்திறனாளி சிறுமி!!

ஒரு திரைப்படத்தின் பாடல் வெளியான உடன் அந்த பாடல்களை அச்சு அசலாக அப்படியே பாடி சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருவது கடந்தசில வருடங்களாக நடந்து வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அஜித் நடித்த ‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்ற ’கண்ணான கண்ணே’ என்ற பாடலை அச்சு அசலாக பாடிய மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி என்பவர் இசையமைப்பாளர் டி.இமானின் பாராட்டைப் பெற்றதோடு தற்போது அவர் திரையுலகில் பாடகராகவும் மாறி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ’கோப்ரா’ என்ற படத்தில் இடம்பெற்ற ’தும்பி துள்ளல்’ என்ற பாடல் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவான இந்த பாடல் அனைவராலும் பாராட்டப்பட்டு மில்லியன்கணக்கான பார்வையாளர்களை பெற்றது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் இந்த பாடலை நேற்று கண் பார்வையற்ற மாற்றுத் திறனாளி சிறுமி சஹானா என்பவர் தனது கீபோர்டு மிக அழகாக வாசித்து, அதனை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். ஏற்கனவே இவர் ஜீ தமிழ் சேனலில் சரிகமபா என்ற நிகழ்ச்சியில் இரண்டாவதாக இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கீபோர்டில் வாசித்த இந்த பாடல் சில நிமிடங்களில் டுவிட்டரில் வைரலாகி பாராட்டுக்கள் குவிந்தது
இந்த நிலையில் நேற்று தற்செயலாக இந்த வீடியோவை பார்த்த ஏஆர் ரஹ்மான் அவர்கள் தனது டுவிட்டரில் ஸ்வீட் என பாராட்டு தெரிவித்திருந்தார். இதனையடுத்து இந்த இந்த சிறுமியின் வீட்டிற்கு நேராக சென்ற ’கோப்ரா’ தயாரிப்பாளர் லலித்குமார் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் சார்பாகவும் தனது சார்பாகவும் சிறுமி சஹானாவுக்கு விலையுயர்ந்த மைக் உள்ளிட்ட ஸ்டூடியோ கட்டமைப்பை பரிசாகக் கொடுத்தார். இந்த பரிசை பெற்றுக் கொண்ட சஹானா லலித்குமாருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் நன்றி தெரிவித்தார். சஹானாவின் இசைதிறமைக்கு அவர் விரைவில் திரைப்பட பின்னணி பாடகியாகவோ, இசையமைப்பாளராகவோ மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Blogger இயக்குவது.