சிபிஎஸ்இ பாடத்திட்ட குறைப்பு: நடிகை தாப்ஸி கண்டனம்!

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பாடத்திட்டம் குறைக்கப்படுவதாக நேற்று(ஜூன் 8) அறிவிப்பு வெளியான நிலையில் அது குறித்து நடிகை தாப்ஸி கண்டனம் தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதன் காரணமான லாக்டவுனால் நாட்டில் நீண்ட காலமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாணவர்களின் நலன்கருதி சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 30 சதவீதம் குறைக்கப்படுவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. ஒன்பதாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே இந்த பாடத்திட்ட குறைப்பு என்றும், இது இந்த கல்வியாண்டுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அந்த அறிவிப்பில் விளக்கப்பட்டுள்ளது.

ஆனால், மாணவர்களின் கல்வி சுமையைக் குறைப்பதாகக் கூறி அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்குகிறீர்களா? என்று கேட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும் இந்த அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இது குறித்து நடிகை தாப்ஸி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப்பதிவில் அவர், “நான் ஏதேனும் அதிகாரபூர்வ அறிவிப்பை தவற விட்டு விட்டேனா? அல்லது இவை எல்லாம் எதிர்காலத்திற்குத் தேவையற்றதா? கல்வியில் சமரசம் செய்து விட்டால் எதிர்காலம் என்பதே இருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.
சினிமா, அரசியல், சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நடிகை தாப்ஸியின் இந்தப்பதிவு இணையத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.
-இரா.பி.சுமி கிருஷ்ணா
Blogger இயக்குவது.