விசேட சுற்றிவளைப்பில் 62000 இறங்கும் அதிகமானோர் கைது!!

நாடளாவிய ரீதியில் கடந்த ஒருமாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த சுற்றிவளைப்பின் போது பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் 62 ஆயிரத்து 686 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

திட்டமிட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸார் , பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசேட சுற்றிவளைப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதற்கமைய கடந்த மாதம் 6 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை ஆறு மணிமுதல் நேற்று புதன்கிழமை நள்ளிரவு 12 மணிவரை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சட்டவிரோத ஆயுதங்கள் , போதைப் பொருட்கள் , சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தமை தொடர்பிலும், பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டிருந்தவர்கள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது போதைப் பொருள் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 14608 சந்தேக நபர்களுள் 8087 சந்தேக நபர்கள் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 கிலோ 750 கிராம் 463 மில்லி கிராம் தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
கஞ்சா போதைப் பொருளுடன் 6006 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 608 கிலோ 636 கிராம் 247 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை ஐஸ் போதைப் பொருளுடனும் 515 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 3 கிலோ 390 கிராம் 577 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபானம் தொடர்பில் இடம்பெற்ற சுற்றிவளைப்புகளில் 12307 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து 4 இலட்சத்து 37 ஆயிரத்து 466 லீட்டர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை சட்டவிரோதமான முறையில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை வெத்திருந்தமை தொடர்பில் 139 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,ஆயுதங்கள் வைத்திருந்ததாக 128 பேரும் , வெடிமருந்துகளை வைத்திருந்ததாக 11 பேருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 42 குழல் 12 ரக துப்பாக்கிகளும் , 29 உள்நாட்டு துப்பாக்கிகளும் , 74 ரிபிடர் ரக துப்பாக்கிகளும், 15 வேறுவகை துப்பாக்கிகளும், 4 கைத்துப்பாக்கிகளும் , 11 ரி 56 ரக துப்பாக்கிகளும் , ரி 81 ரக துப்பாக்கி ஒன்றும் , 692 தன்னியக்க தோட்டாக்களும் மற்றும் 6 வாள்களும் , 2 கத்திகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை 367 கிராம் தொகை வெடி மருந்து , 23 டெட்டனேட்டர்கள் மற்றும் 21 கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 12186 சந்தேக நபர்களும், வேறுவகையான குற்றச்செயல்களை புரிந்த 23446 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதன் நோக்கிலே பொலிஸார் இந்த விசேட சுற்றிவளைப்பை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கமைய கடந்த ஒருமாத காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சுற்றிவளைப்புகளின் போது 62 ஆயிரத்து 686 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.