துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன? திமுக

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்துக்கு திமுக பதிலளித்துள்ளது.


திருப்போரூர் அருகே கோயில் நிலத்தை ஆக்கிரமித்து இமயம் குமார் என்பவர் தரப்பு சாலை அமைக்க முயன்றது. இதற்கு எம்.எல்.ஏ இதயவர்மன் தந்தை லட்சுமிபதி, அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் லட்சுமிபதியை இமயம் குமார் தரப்பு அரிவாளால் வெட்ட, பதிலுக்கு தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டுள்ளார் லட்சுமிபதி.

இதுதொடர்பாக எம்.எல்.ஏ இதயவர்மன் உள்பட அவரது தரப்பில் 11 பேர் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். அதுபோலவே இமயம் குமார் உள்பட 3 பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், திமுகவில் துப்பாக்கிக் கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதாக குற்றம்சாட்டினார். ஆட்சியில் இல்லாதபோதே இப்படி என்றால் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, திருப்போரூர் எம்.எல்.ஏ. இதயவர்மன் சம்பவம் நடந்த இடத்திற்கு, தனது நிலத்தைப் பாதுகாக்கப் போகவில்லை. கோவில் நிலத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையை முன்னிட்டு அங்கு சென்றார் என்று குறிப்பிட்டார்.

தங்கள் பகுதியில் உள்ள கோவில் நிலம் ஒரு தனியார் நிலத்திற்காகத் தாரை வார்க்கப்படுகிறது என்றால் அதைத் தட்டிக் கேட்கும் உரிமை அப்பகுதி மக்களுக்கு இருக்கிறது. அந்த மக்களின் கோரிக்கைக்கு உதவிட வேண்டிய பொறுப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கு இருக்கிறது. தட்டிக் கேட்டதற்காக வீடுவரை விரட்டி வந்து தாக்கும் விதத்தில் அந்த ரவுடிகளை காவல்துறை அனுமதித்தது ஏன்? ஆனால், கோவில் நிலத்தை ஆக்கிரமித்து வன்முறையில் ஈடுபட்ட அதிமுக முக்கிய பிரமுகர்களின் பினாமி பற்றி அமைச்சர் ஜெயக்குமார் வாய் திறக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர்,

“திமுக எம்.எல்.ஏ மீது மட்டுமே பொய் வழக்குப் போட வேண்டும் என்ற ஒரே உள்நோக்கத்துடன் விசாரணை துவங்கியவுடனேயே அமைச்சர் ஜெயக்குமார் வழக்கின் போக்கை திசை திருப்பும் வகையில் பேட்டி கொடுத்துள்ளார். 50 ரவுடிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்தது அ.தி.மு.க. முக்கிய பிரமுகரின் பினாமி. ஆனால் அதை அப்படியே மறைத்து விட்டு திமுக எம்.எல்.ஏ. மீதும், அரிவாள் வெட்டுக்கு உள்ளான அவரது தந்தை மீதும் வழக்குப் போடத் தூண்டியது யார்? அமைச்சர் ஜெயக்குமார்தானா? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், “கோவில் நிலத்திலிருந்து எம்.எல்.ஏ.வின் வீடுவரை விரட்டி வந்த ரவுடிகளைக் காப்பாற்றும் விதத்தில் அமைச்சர் அறிக்கை விடுவது ஏன்? அமைச்சர் ஜெயக்குமாரே தான் துப்பாக்கி வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். அவர் வீடுவரை ரவுடிகள் விரட்டி வந்தால் தற்காப்பிற்கு வானத்தை நோக்கிச் சுடுவாரா? மாட்டாரா?” என்று கேட்டதோடு,

“ரவுடிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள வானத்தை நோக்கி எம்.எல்.ஏ.வின் தந்தை சுட்டதை திசைதிருப்பி - ஏதோ நிலத்தை அபகரிக்க நடைபெற்ற முயற்சி போல் பேசுவதும் - கோவில் நிலத்தைக் காப்பாற்ற நடைபெற்ற போராட்டத்தை ஏதோ எம்.எல்.ஏ., தனது சொந்த நலனுக்காக நடத்திய போராட்டம் போல் சித்தரிப்பதும் அமைச்சர் ஜெயக்குமாருக்கு வேண்டாத வேலை. அமைச்சர் ஜெயக்குமாரால் தி.மு.க.வை சிறுமைப்படுத்தி விடலாம் என்று கனவில் கூட நினைக்க வேண்டாம். அவரால் மட்டுமல்ல; அவருடைய வன்முறைக் கட்சியாலும் திமுகவை ஆட்டவோ அசைக்கவோ முடியாது” என்று கூறியுள்ளார்.

எழில்

Blogger இயக்குவது.