சுஷாந்த் காதலியின் முதல் பதிவு

சுஷாந்த் சிங் மறைந்து ஒரு மாத காலமான நிலையில், முதல் முறையாக அவரது காதலி ரியா சக்ரவர்த்தி சுஷாந்த் மறைவு குறித்து பதிவிட்டுள்ளார்.


பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல் கொடுத்த மன உளைச்சலால்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்ட ஒரு மாதத்திற்குப் பிறகு, அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தி உணர்ச்சிபூர்வமான குறிப்பை பகிர்ந்துள்ளார். சுஷாந்த் மறைவுக்குப் பின் சமூக ஊடக வெறுப்பு, சர்ச்சை, அதிகப்படியான விமர்சனம் ஆகியவற்றை சந்தித்த ரியா, இக்குறிப்பின் மூலம் சுஷாந்திற்கும் தனக்குமான அன்பை பகிர்ந்துள்ளார்.

ரியா தன்னுடைய பதிவில், "என் உணர்ச்சிகளை எதிர்கொள்ள இன்னும் நான் சிரமப்படுகிறேன். என் இதயத்தில் ஈடுசெய்ய முடியாத உணர்ச்சியற்ற நிலை சூழ்ந்துள்ளது. நீ தான் என்னை காதலின் மீதும் அதன் சக்தி மீதும் நம்பிக்கை கொள்ளவைத்தது. ஒரு எளிய கணித சமன்பாடு மூலம் வாழ்க்கையின் அர்த்தத்தை எவ்வாறு புரிந்துகொள்ள முடியும் என்பதை நீ தான் எனக்குக் கற்றுக் கொடுத்தாய். ஒவ்வொரு நாளும் உன்னிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன் என்று நான் உனக்கு உறுதியளிக்கிறேன். நீ இங்கு இல்லாததை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன்."

"நீ இப்போது மிகவும் அமைதியான இடத்தில் இருப்பாய் என்று நான் அறிவேன். நிலா, நட்சத்திரங்கள், விண்மீன் திரள்கள் ஆகியவை மிகப் பெரிய இயற்பியலாளரை திறந்த கரங்களுடன் வரவேற்கும். கருணை மற்றும் மகிழ்ச்சி நிறைந்த உன்னால் ஒரு விண்மீனையும் ஒளிரச் செய்யமுடியும், இப்போது நீயும் அதில் ஒன்றானாய். எனது விண்மீனே, உனக்காக காத்திருந்து உன்னை மீண்டும் என்னிடம் அழைத்து வர விரும்புகிறேன்.”

"என் வார்த்தைகள் நமது அன்பை வெளிப்படுத்த இயலாது. அது நம் இருவருக்கும் அப்பாற்பட்டது என்று நீ சொன்னபோது உண்மையிலேயே அதை நீ அர்த்தப்படுத்தினாய் என்று நினைக்கிறேன். எல்லாவற்றையும் திறந்த மனதுடன் நீ நேசித்தாய். உன்னை இழந்தது 30 நாட்கள், ஆனால் உன்னை நேசிப்பதோ வாழ்நாள் முழுதும்..." என ரியா உணர்ச்சிபூர்வமாக பதிவிட்டுள்ளார்.

சுஷாந்த் மறைந்து ஒரு மாத காலம் ஆகியுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அவரது மறைவு குறித்து பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

-முகேஷ் சுப்ரமணியம்
Powered by Blogger.