வீடு தரும் வெறுமையைப்போக்க சில வழிகள்!!

"சிலருக்கு வீடே உலகம்; சிலருக்கு உலகமே வீடு" என்று 'சிந்து பைரவி' படத்துல பாலசந்தர் சார் ஒரு டயலாக் வெச்சிருப்பார். உண்மையிலேயே இன்னைக்கு வீடே உலகமா மாறிவிட்டது. 'வொர்க் ஃப்ரம் ஹோம்', 'ஸ்கூல் ஃப்ரம் ஹோம்', ஏன், சினிமா, ஷாப்பிங், காய்கறி வாங்குவதிலிருந்து கரன்ட் பில் கட்டுவதுவரை எல்லாவற்றையும் வீட்டுக்குள்ளிருந்தே செய்ய வேண்டியுள்ளது. வீடு என்ற சிறிய வட்டத்துக்குள் வாழ கிட்டத்தட்ட நாம் பழகிவிட்டோம்.


ஆனால், இந்தச் சிறிய வட்டத்துக்குள்ளான வாழ்க்கை நமக்குத் தரும் வெறுமையும் சலிப்பும் தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. இந்த அழுத்தத்தில் இருந்து நம்மை விடுவித்துக்கொள்வது அவசியம். சமீபத்திய பல இணைய பதிவுகளில்கூட பலர் இந்த மன அழுத்தத்தைக் கையாள்வது கடினமாக உள்ளதாகப் பகிர்ந்துள்ளனர்.

இந்த அழுத்தத்தைக் கையாள சில வழிகள்,
1. குழந்தைகளின் ஆன்லைன் கிளாஸோ இல்லை நம் அலுவலகப் பணியோ காலையில் தொடங்கும் முன், எப்போதும் பள்ளியோ, அலுவலகமோ செல்லவதைப் போல குளித்து, நல்ல உடைகள் அணிந்து பின் பணிகளைத் தொடருங்கள். வீட்டில்தானே இருக்கிறோம் என்று நாம் அணியும் பழைய ஷாட்ஸும் நைட்டியுமே நம் எனர்ஜி லெவலை பாதி குறைத்துவிடும்.

2. ஆன்லைன் வகுப்புகள் அல்லது வொர்க் ஃப்ரம் ஹோமில் இருப்பவர்களுகான ஒரு வொர்க் ஸ்பேஸை உருவாக்குங்கள். உதாரணமாக, இரண்டு படுக்கையறை வசதியுள்ளவர்கள் ஒரு அறையை வொர்க் ஸ்பேஸாக மாற்றுங்கள். அதில் ஓர் ஓரத்தில் குழந்தைக்கான மேஜையும் இன்னோர் ஓரத்தில் அலுவலகப் பணிக்கான மேஜையும் தயார் செய்து கொடுங்கள். ஒருவரையொருவர் தொந்தரவு செய்யாமல் இருக்க ஹெட்போன்ஸ் பயன்படுத்தலாம். இதனால் கவனச்சிதறல் இல்லாமல் செயல்திறன் அதிகரிக்கும். எக்காரணம் கொண்டும் டி.வி பார்த்துக்கொண்டு வேலையைத் தொடராதீர்கள். அது நம் செயல்திறனை முற்றிலும் குறைத்து சிறு வேலையைக்கூட அதிக நேரம் எடுத்துச் செய்ய வைத்துவிடும்.

3. சரியான நேரத்துக்குச் சாப்பிடுங்கள். வீட்டில்தானே இருக்கிறோம் என்று நேரம் தவறிச் சாப்பிடுவது மன அழுத்தத்துக்கு மற்றுமொரு காரணம். அதேபோல் ஒரு கையில் சாப்பாடு ஒரு கையில் லேப்டாப் என்று உணவருந்தாதீர்கள். பதினைந்து நிமிடங்களை உணவருந்த என்று ஒதுக்கி அந்த நேரத்தில் எந்த வேலையும் இல்லாமல் நிம்மதியாகச் சாப்பிடுங்கள்.

4. இந்த நேரத்தில் கணவர் மற்றும் குழந்தைகளை வீட்டில் வைத்துக்கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாவதாகச் சொல்கிறார்கள் பல இல்லத்தரசிகள். உங்கள் வேலைகளைத் தள்ளிப்போடாமல் எப்போதும் குழந்தைகளைப் பள்ளிக்கும், கணவரை அலுவலகத்துக்கும் அனுப்புவதைப் போல பின்பற்றுங்கள். எப்போதும்போல அவர்களைக் காலையில் கிளப்பி வீட்டில் உள்ள வொர்க் ஸ்பேஸில் பணிகளைத் தொடங்கச் செய்யுங்கள். எக்காரணம் கொண்டும் உங்களுக்கான 'மீ-டைமை' கைவிடாதீர்கள்.
5. வீட்டில் இருந்து வேலை செய்வதால் நாம் தினமும் அலுவலகம் சென்று வரும் பயண நேரம் நமக்கு மிச்சம். அந்த நேரைத்தை இனிமையான குடும்ப நேரமாக மாற்றுங்கள். குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடவோ, அவர்களுடன் ஆரோக்கியமான விவாதம் செய்யவோ பயன்படுத்துங்கள்.
இந்த உலகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாற்றத்தைக் கடந்து கொண்டேதான் வந்திருக்கிறது. இம்மாதிரியான கடினமான காலகட்டத்தை தெளிந்த மனநிலை மற்றும் நேர்த்தியான திட்டமிடலால் நம்மால் கடக்க முடியும், நம்புவோம்.

- விஜி குமரன்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.