கொரோனா வைரஸ் தாக்கம் - வெற்றி கொள்ள முடியும்- Dr.சி.சிவன்சுதன்!!

COVD19       எனப்படுகின்ற ஒரு வகை கொரோனா வைரஸ் தாக்கத்தின் பரம்பலினால் நாம் அநாவசியமாக பயப்படுகின்றோமா? போதுமான நடவடிக்கை எடுக்கின்றோமா? இந்த இக்கட்டான நிலையில் நாம் எவ்வாறாக நடந்து கொள்ள வேண்டும். இதன் உண்மை நிலை என்ன என்பது சம்பந்தமான ஒரு தெளிவு படுத்தல் பயனுடையதாக அமையும்.

இந்த வைரஸ் நாடு, இன, வயது, வேறுபாடின்றி அனைவரையும் பாதிக்கக்கூடியது. இருந்த போதும் இதில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இருதய நோய் உள்ளவர்கள், சிறுநீரக நோய் உள்ளவர்கள், நுரையீரல்  நோய்  நிலை உள்ளவர்கள் போன்றோரை அதிகளவில் பாதிப்பதாக ஆய்வுகள் தெளிவுபடுத்தி நிற்கின்றன.
எமது சமூகத்திலே ஒப்பீட்டளவிலே வயது முதிர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கின்றது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அத்துடன் மேலே குறிப்பிடப்பட்ட நோய் நிலை உள்ளவர்களுடைய எண்ணிக்கையும் மிகவும் அதிகமாக உள்ளது.
எனவே இந்த பிரதேசங்களிலே COVID19
 வைரஸ் கட்டுப்பாடின்றி பரவுமாக இருந்தால் அனைவருக்கும் அவசரமான கவனிப்பு முறைகளை வழங்குவது சுகாதாரத் துறையினருக்கு ஒரு பெரும் சவாலாகவே அமையும். அத்துடன் இதன் தாக்கங்களும் மிகவும் அதிகமாக இருக்கும்.
எனவே இந்த நோய் நிலையின் பரம்பரை தடுப்பதற்கு நாம் சகல விதமான முயற்சிகளையும் எடுக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக இருக்கும். உலகலாவிய அளவிலே மிகப் பாரிய சமூக பொருளாதார மருத்துவ உளவிய தாக்கங்களை ஏற்படுத்தி நிற்கின்ற இந்த COVID19 எனப்படுகின்ற கொரோனா வைரஸின் தாக்கத்தை நாம் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. சில நாடுகளிலிலே சில பிரதேசங்களிலே இதற்கு அதிக முக்கியத்துவம் வழங்காமல் இருந்தாலும் நாம் எமது சூழ்நிலையிலேயே அவ்வாறு இருந்து விட முடியாது.
இந்த வைரஸ் காற்றினால் பரவுகின்றது என்பதை சொல்வதிலும் பார்க்க நோயாளி இருமும் பொழுதும் தும்மும் பொழுதும் வெளிப்படும் உமிழ்நீர் சளி துளிகளினூடாகவே முக்கியமாக இந்த நோய் பரவலடைகிறது.
இந்த சளி துளிகள் நோயாளி உலவி வரும் உள்ள பொருட்களிலே படிந்திருக்கும். அவற்றை இன்னொருவர் தொடும்பொழுதும் அவருடைய கைகளிலே இந்த நோய்கிருமிகள் தொற்றுதலடையும். பின்னர் அவர் தன்னுடைய கைகளினால் முகம், மூக்கு, கண் என்பவற்றை தொடும் பொழுது அவரும் அந்த தொற்று நோய்க்கு உட்படுகின்றார். எனவே கைகளை அடிக்கடி சவற்காரம் இட்டு கழுவிக் கொள்வது மிகவும் முக்கியமாகும்.
அடுத்து எமது கைகளினால் எமது முக பகுதியை தொட்டுக்கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சவற்காரத்திற்கு பதிலாக 60 வீதம் அற்ககோல் கலந்த தொற்று நீக்கிகளையும் நாம் பயன்படுத்த முடியும். அத்துடன் எமது கைபேசிகளையும் கைக்கடிகாரங்களையும் தொற்று நீக்கம் செய்வது மிகவும் முக்கியமானதாகும். இவற்றின் ஊடாகவும் இந்த தொற்றுகள் பரவக்கூடியதாகும்.
பொது இடங்களுக்கு செல்லும் போதும் பொருட்களை கைகளால் தொடுவதை நாம் தவிர்த்;து விடுவது நல்லது. இருமல், சளி உள்ளவர்களுடன் பலகுவதை தவிர்த்து விடுவது மிகவும் அவசியமானதாகும். 3 அல்லது 4 அடி தள்ளி இருப்பது அவர் தும்மும் பொழுதும் இரும்மும் பொழுதும் அவர் சளித் துளிகள் எம்மீது நேரடியாக படும் சந்தர்ப்பத்தை குறைத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்கும்.
ஓவ்வொருவரும் தும்மும் பொழுதும் இருமும் பொழுதும் தமது மூக்கு வாய் பகுதிகளை ருசுக்களினாலோ துணிகளினாலோ அல்லது கைகளினாலோ மூடிக்கொள்வது மிகவும் அவசியமாகும். இது இந்த நோய்ப் பரம்பரை கட்டுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
எமக்கு இருமல் சளி இருப்பின் நாம் மாஸ்க் பாவித்து கொள்வது நல்லது. இது மற்றவர்களுக்கு  நோய் பரப்பும் வீதத்தை கட்டுப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். இரும்மல் காய்ச்சல் மூச்சு விடுவதற்கு சிரமமாக இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெற்றுக்கொள்வது அவசியமாகும்.
COVID19 தோற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளவர்கள் அதனை முன்கூட்டியே மருத்துவரிடம் தெரியப்படுத்துதல் வேண்டும். சுற்றுலாக்கள் திருவிழா  அல்லது மக்கள் கூடும் இடங்களுக்கு செல்லுதல் போன்றவற்றை தவிர்த்துக் கொள்வது நல்லது.
நண்பர்கள், உறவினர்கள் போன்றவர்களை சந்திக்கும் பொழுது கைகுலுக்கும் பழக்கத்தை அல்லது கட்டியணைத்தல் போன்ற பழக்கத்தை தவிர்த்து வணக்கம் சொல்லும் பழக்கத்தை நாம் வளர்த்துக் கொள்வது அவசியமாகும்.
இந்த நோய் நிலை சம்பந்தமாக அநாவசியமாக பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை. ஆனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. அநோகமான COVID19 தொற்றுக்குள்ளானவர்கள் 10 நாட்களிலிலே சுகப்பட்டு விடுகின்றனர். இந்த வைரஸ் கிருமி உயிர்க்கலங்களுக்குள் மட்டுமே பெருக்கமடைகின்றது. வெளிச்சூழலிலே இந்த கிருமி பெருக்கமடைய மாட்டாது. அத்துடன் வெளிச்சூழலிலே மிக நீண்டகாலம் உயிர் வாழ மாட்டாது.
உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தி நல்ல நிலையில் இருக்குமாயின் இந்த நோய்த் தொற்று ஏற்பட்டாலும் எம்மால் இலகுவில் சுகமடைய முடியும். இவை எமக்கு மிகவும் அனுகூலமான விடயம். எமக்கு நோய் எதிர்ப்புச் சக்தியை பெருக்கிக் கொள்ள புகைத்தல், குடி வகை பாவனை என்பவற்றை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
ஆரோக்கிய உணவு உண்ண வேண்டும். போதியளவு ஓய்வெடுத்தல் அவசியமாகும்.  தமது உயிரை பணயம் வைத்து சேவையாற்றும் மருத்துவக் குழுவுக்கும் ஏனைய உத்தியோகத்தர்களுக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஏமக்கும் ஏனையவர்களுக்கும் இந்த தொற்று ஏற்படாமலிருக்க அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும். இருமல் சளியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் மனநிலை பல சஞ்சலங்கள் உற்பட்டிருக்கும் அவர்களுடைய அநாவசியமான பயத்தை போக்கி அவர்களையும் அன்பாகவும் ஆதரவாகவும் கவனிக்க வேண்டிய ஒரு தேவை இருக்கிறது.
இந்த நிலையை கையாள்வதற்கு அனைத்து தரப்பினரினதும் முயற்சி அவசியமாக தேவைப்படுகிறது. பல கடினமான நிலைகளில் எதிர்கொண்ட அனுபவம் எம் அனைவருக்கும் இருக்கிறது. அது உங்கள் அனைவருக்கும் இந்த நிலையை கையாள உறுதுணையாக அமையும். 
எதிர்வரும் இரண்டு வாரங்கள் கொவின் நைன்ரின் என்ற கொரோனா வைரஸின் பரம்பல் எவ்வாறு அமையப் போகிறது என்பதை எதிர்வு கூறும் ஒரு முக்கியமான காலப்பகுதியாக அமையப்போகின்றது. நோய் தொற்றினை ஆபத்தான கட்டத்தை அடையாமல் தடுப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து  இயங்குவது அவசியமாகிறது.
வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து 14 நாட்களுக்குள் ஒருவருக்கு வரண்ட இருமல், காய்ச்சல், உடல் உளைவு, பஞ்சித்தண்மை என்பன ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ பிரிவுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்ளுதல் வேண்டும். தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துக்குரியவரிடம் நெருங்கிப்பழகி 14 நாட்களுக்குள் அறுகுறி ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவப்பிரிவுடன் தொடர்பு கொள்ளவேண்டும்.
கோவில்கள், திருவிழாக்கள், பலர் கூடும் பொது நிகழ்வுகள் போன்றவற்றைத் தவிர்த்து இயலுமானவரை வீட்டிலே தங்கியிருப்பது இந்த நோயின் பரம்பலை கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உறுதுணையாக அமையும்.பொது இடங்களில் துப்புதல், பொது இடங்களில் உணவு அருந்துதல் போன்றவற்றை தவிர்த்து விடுவது நல்லது.
சாதாரண இருமல் தடிமல் ஏற்படினும் நாம் எம்மை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வது நல்லதாக இருக்கும். யாருக்குமே முன் அனுபவம் இல்லாது திடீரென்று உதயமாகிய இந்த கொடிய நோய் சம்பந்தமான ஆய்வுகள் தற்போது தான் வேகமாக நடைபெற்றுக்கொள்கின்றது. இந்த நிலையிலே உறுதிப்படுத்தப்படாத பிழையான பல தகவல்களை பரப்புவது எதிர்மறையான பல விழைவுகளை ஏற்படுத்தலாம். இது சம்பந்தமாக மக்கள் மிக விழிப்பாக இருப்பது அவசியமாகும்.
வெளியிடங்களிலிருந்து வீடு திரும்பியவுடன் அல்லது விலங்குகள் பறவைகள் போன்றவற்றின் பராமரிப்பை முடித்தவுடன் குளிப்பது அவசியமாகும்.
கைபேசி, மூக்குக்கண்ணாடி, கைக்கடிகாரம் போன்றவற்றை 60-70 வீதம் சேர்ந்த அல்க்ககோல் சேர்ந்த தொற்று நீக்கிகளினால் சுத்தம் செய்து கொள்வது நல்லது. ஒருவருக்கு கோவின் நைன்றின் இருக்கலாம் என உங்களுக்கு சந்தேகம் ஏற்படின் அது சம்பந்தமாக உடனடியாக சுகாதார பிரிவினருக்கு தெரியப்படுத்துவது அவசியமாகும்.
 பொதுவாக தொற்று ஏற்பட்ட 90 வீதமானவர்களுக்கு காய்ச்சல் இருக்கும். 70 வீதமானவர்களுக்கு வரண்ட இருமல் இருக்கலாம். 30 வீதமானவர்களுக்கு உடம்பு உளைவு, பஞ்சித்தன்மை போன்றவை காணப்படலாம். மூச்சு விடுவதிலே சிரமம் ஏற்படலாம். 14 நாட்கள் உட்பட்ட காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களுக்கு அல்லது நோய்த்தொற்று இருக்கலாம் என சந்தேகத்துக்குரியவர்களுடன் நெருங்கிப்பழகியவர்களுக்கு இந்த அறிகுறி ஏற்பட்டால் அது சம்பந்தமாக உடனடியாக சுகாதார பிரிவினருக்கு தெரியப்படுத்துவது அவசியமாகும்.
அத்துடன் நோய்த் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துக்குரியவர்களை மனம் நோகாது பார்த்துக்கொள்வதும் மிகவும் அவசியமாகும். சாதாரணமாக இருமல் உள்ளவர்களும் இருமும் போதும் தும்மும் பொழுதும் தமது மூக்கு வாய் பகுதிகளை ருசுவினாலோ அல்லது துணிகளினாலோ மூடிக்கொள்வது முகவும் முக்கியமானதாகும். காறித்துப்புவதும் வெற்றிலை போட்டு தெருவிலோ துப்புவதும் பொது இடங்களிலே பொருட்களை அநாவசியமாக தொடுவது பிறரை தொட்டுப் பேசுதல் கைகொடுத்தல் போன்றவை நோய்ப் பரம்பலை அதிகரிக்கும். எனவே இவற்றை தவிர்த்து விடுவது அவசியமாகும்.
நோய்ப்பரம்பலை தடுக்க எம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். மற்றவர்களையும் அவ்வாறான முயற்சிகளையும் எடுக்க ஊக்கப்படுத்துவோம்.  எமது மக்கள் அன்று தொட்டு கடைப்பிடித்து வந்த எமது பாரம்பரிய நடவடிக்கைகளை சரியான முறையிலே கடைப்பிடிப்போமாக இருந்தால் இந்த நோயின் தாக்கத்தை நாம் பெருமளவும் தவிர்த்துக்கொள்ள முடியும்.
உதாரணமாக வெளியிடங்களுக்குச் சென்று வீடு திரும்பும் பொழுது கை கால் அலம்பி கழுவி உள்ளே செல்லுதல், கை கூப்பி வணக்கம் தெரிவித்து பிறரை வரவேற்றல்,  பஞ்சமா பாதகங்களில் ஒன்றான மதுவை தவிர்த்து விடுதல், புகைத்தலை தவிர்த்து விடுதல், ( நோய் எதிர்ப்பு சக்தியை காத்துக்கொள்வதற்கு உறுதுணையாக அமையும்)
ஆரோக்கியமான வீட்டில் நன்கு சமைத்த உணவுகளை உண்ணுதல், சமைத்தலின் போது இந்த நோய்க்கிருமிகள் இறந்து விடுகின்றன. இடங்களுக்குச் செல்லும் போது பொது வாகனங்களை பயன்படுத்துவதை தவிர்த்து எமது சொந்த வாகனங்களான துவிச்சக்கர வண்டிகள் பாவித்தல் அல்லது நடந்தே இடங்களுக்குச் செல்லுதல். வீட்டில் தொற்று நீக்கிகள் தெளித்து சுத்தம் செய்து பெருக்குதல். பண்டைய ஆரோக்கிய உணவுகளை உண்டு எமது நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ளுதல் போன்ற சிறு சிறு நடவடிக்கைகளில் மூலம் இந்த பெரும் நோயை எம்மால் வெற்றி கொள்ள முடியும்.
Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.