ரூ.75,000 கோடி முதலீடு, தமிழுக்கு முக்கியத்துவம்: கூகுள்

இந்திய டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக ரூ. 75,000 கோடி முதலீடு செய்யப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், அமெரிக்க வாழ் தமிழருமான சுந்தர் பிச்சையுடன் இன்று (ஜூலை 13) காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.


இதுதொடர்பாக பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று காலை சுந்தர் பிச்சையுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தினேன். குறிப்பாக இந்திய விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தும் தொழில்நுட்ப சக்தியை அதிகரிப்பது உட்பட பல விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம்” என்று கூறினார்.“எங்கள் உரையாடலின் போது, கொரோனா நேரத்தில் எழுந்துள்ள புதிய பணிச் சூழல் குறித்து பேசினோம். விளையாட்டு போன்ற துறைகளில், தொற்று ஏற்படுத்திய சவால்கள் குறித்து நாங்கள் ஆலோசித்தோம். 


தகவல் பாதுகாப்பு மற்றும் சைபர் செக்யூரிட்டி ஆகியவை குறித்தும் பேசினோம்” என்ற பிரதமர், கூகுள் நிறுவனம், கல்வி, கற்றல், டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் எப்படி செயலாற்றுகிறது என்பதை தெரிந்துகொண்டதாகவும் குறிப்பிட்டார்.
இதன்பின்னர் நடைபெற்ற ‘கூகுள் ஃபார் இந்தியா’ நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் பிச்சை, இந்தியாவில் கூகுள் நிறுவனம் 10 பில்லியன் டாலர் (ரூ.75,000 கோடி) முதலீடு செய்யும் என்று அறிவித்தார்.


இதுதொடர்பாக சுந்தர் பிச்சை, “இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்தை வளர்ப்பதற்காக கூகுள் இந்தியா 10 பில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளோம். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை ஆதரிப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


 மேலும், இது இந்தியாவின் எதிர்காலம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த தங்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும் என்றும் குறிப்பிட்டார்.
அடுத்த 5-7 ஆண்டுகளில் இந்த ரூ. 75,000 கோடி இந்தியாவில் முதலீடு செய்யப்படும் எனவும், பங்கு முதலீடு மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் அது செயல்படுத்தப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக கூகுள் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கியமான நான்கு துறைகளின் முதலீடுகளில் கவனம் செலுத்துவோம். குறைந்த கட்டணத்தில் இணைய தள வசதி மற்றும், தமிழ், இந்தி, பஞ்சாபி உள்ளிட்ட இந்திய மொழிகளில் தகவல்களை விரிவுபடுத்தவும் கூகுள் முதலீடுகள் அதிக கவனம் செலுத்தும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எழில்
Powered by Blogger.