கன்னடர் ரஜினி, கிறிஸ்தவர் விஜய்: மீரா மிதுன் சர்ச்சை கருத்து!

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் ஆகியோர் தன்னுடைய பெயரைக் கெடுக்க முயற்சி செய்வதாகக் குற்றம் சாட்டிய நடிகை மீரா மிதுன், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

நடிகையும், பிரபல மாடலுமான மீரா மிதுன் தொடர்ந்து விவாதங்களில் சிக்கி வருகிறார். ‘தானா சேர்ந்த கூட்டம்’,‘8 தோட்டக்கள்’,‘போதை ஏறி புத்தி மாறி’ போன்ற சில தமிழ் திரைப்படங்களில் நடித்த அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்துகொண்டார். அவர் சமீபகாலமாக சம்மந்தமில்லாத சர்ச்சை கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு சிக்கலில் மாட்டி வருகிறார். தமிழக முதலமைச்சர் ஆவேன் என்றும், த்ரிஷா தன்னைக் காப்பி அடிக்கிறார் என்றும் அவர் கூறிய கருத்துக்கள் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் தன்னுடைய பெயரைக் கெடுக்க முயற்சி செய்து வருவதாக மீரா மிதுன் கூறியுள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகம் என்னை ஒதுக்கி வைத்துவிட்டது. அவ்வாறு செய்ததற்கு நன்றி. அதனால் தான் நான் இன்று சூப்பர் மாடலாக இருக்கிறேன். கோலிவுட் எனக்கு எதிராக இருப்பதால் நான் பாலிவுட், ஹாலிவுட்டில் பணியாற்றி வருகிறேன். ஆனால் ஏன் இன்னும் தமிழகம் என்னை டார்கெட் செய்கிறது என்பது தான் எனக்கு புரியவில்லை. என்னை விமர்சிப்பது தான் அவர்களின் ஒரே வேலையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், “தமிழ்நாடு தமிழர்களுக்கு, இந்துகளுக்கானது. ஆனால் மலையாளிகளும், கிறிஸ்தவர்களும் இங்கு ஆதிக்கம் செலுத்தி ஒரு தமிழ் பெண்ணுக்கு அநீதி இழைத்து வருகிறார்கள். மதுரையை எரித்த கண்ணகியைப் போன்று எனக்கு கோபம் அதிகரித்தால் நானும் தமிழகத்திற்கு அதையே தான் செய்வேன்.” என்று குறிப்பிட்ட அவர் பிரதமர் நரேந்திர மோடியின் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்து, ‘தமிழகத்தை அழித்து விடுங்கள்’ என்றும் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பதிவில், “தமிழ்நாடு அழிந்து கொண்டிருக்கிறது. உங்களை எல்லாம் காப்பாற்றிக் கொள்ளுங்கள். நான் பத்திரமாக, வசதிகளுடன் சிறப்பாக இருக்கிறேன். கன்னடர் ரஜினிகாந்த், கிறிஸ்தவர் விஜய் ஆகியோர் என் பெயரை கெடுக்க முயற்சி செய்கிறார்கள்?! சைபர் புல்லியிங் குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க நான் தயங்க மாட்டேன். கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்மறை கவன ஈர்ப்புக்காக மீரா மிதுன் இவ்வாறு தொடர்ந்து சர்ச்சை கருத்துக்களை பதிவிட்டு வருகிறார் என்று குறிப்பிட்ட ரசிகர்கள், அவரது கருத்துக்களுக்கு கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
-இரா.பி.சுமி கிருஷ்ணா
Powered by Blogger.