புழுதி - பாகம் 12!!

கதிரையும் அழைத்துக்கொண்டு நாங்கள் ஐவருமாக பெரியத்தை வீட்டிற்குச் சென்றுவிட்டோம்.  படம் போடுவதற்கான ரீ.வி, டெக், இஞ்ஜின் எல்லாமே வந்துவிட்டிருந்தது. அந்த நாட்களின் பலருக்கும் விருப்பமான நாயகனாக நடிகர் ரஜனிகாந் இருந்தாலும் எனக்கென்னவோ வில்லன் நடிகர் ரகுவரனைத்தான் அதிகம் பிடிக்கும். 


வில்லனாக நடித்தாலும் அந்தப் பாத்திரத்தில் அவர் வெளிக்காட்டும் நடிப்புத்திறன் மிக அபாரமானது என்பது எனது எண்ணம். அவர் ஒரு தேர்ந்த கலைஞன் என்றுதான் நான் நினைப்பதுண்டு. அத்தை வீட்டினர் இரண்டு கொப்பிதான் எடுத்திருந்தனர், இன்னும் மூன்று கொப்பி விரும்பியவர்கள் எடுங்கள் என்று சொன்னதால் அப்பா, நடிகர் திலகம் சிவாஜி நடித்த 'பாலும் பழமும்' படமும் எனக்கு பிடிக்கும் என்பதற்காக ரகுவரன் நடித்த 'தூள் பறக்கிறது' படமும் எடுத்துக்கொண்டு வந்திருந்தார்.

வேறுயாரோ ரஜனிகாந்தின் புதுக்கவிதை படம் எடுத்திருந்தனர். போன உடனே அத்தை தந்த பசுப்பால் ரீயும் சீடைப்பலகாரமும் வயிற்றுக்குள் புகுந்துவிட்டிருந்ததால் உற்சாகமாக எல்லோரும் படம் பார்ப்பதற்காய் அமர்ந்துகொண்டோம்.

படம் ஓடிக்கொண்டிருந்தது,  எனக்கு நேரே சற்றுத்தள்ளி, மதுவந்தி அமர்ந்திருந்தாள். அடிக்கடி அவளுடைய பார்வை என்னைப் பார்த்து மீள்வதை என்னால் உணரமுடிந்தது. ஆனாலும் நான் தலையைத் திருப்பவே இல்லை. கைகளை ஆட்டி ஆட்டி கதைத்துக் கொண்டிருந்தவளின் செய்கைகள் எனக்கு விசித்திரமாகவும் சிரிப்பாகவும் இருந்தது.

குமரியாகிவிட்ட அவளுக்குள்ளும் இன்னும் சில குழந்தைத்தனங்கள் இருக்கத்தான் செய்கிறது என்று எண்ணிக்கொண்டேன். படம் தொடங்கி சற்று நேரம் கழிந்திருக்கும், சின்னக்கல் ஒன்று என் மீது வந்து விழுந்தது, சட்டென்று திரும்பிப் பார்த்தேன், ஏதோ பொட்டலம் ஒன்றை என்னிடம் நீட்டினாள், நான் தலையை ஆட்டி, என்ன என்பது போல வினாவினேன், ஒன்றும் சொல்லாமல் என் கைகளிற்குள் எறிந்துவிட்டாள், எறிந்துவிட்ட பின்புதான், 'அக்கம்பக்கம் உறவினர் யாராவது பார்க்கின்றார்களா' எனப் பார்த்தாள். நான் பேசாமலே இருக்க,
என்னருகில் இருந்த சீராளன், எட்டி என் மடியில் இருந்த பொட்டலத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தான், மைலேடி ரொபியும் கச்சானும் வறுத்த புளியம் விதையும் இருந்தது.
தொடரும்
கோபிகை

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Blogger இயக்குவது.