கொடுங்கள் -----கிடைக்கும்!!


'செம்புலப் பெயல் நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே'  என்கிறது குறுந்தொகை.  இதன் பொருள்,  இல்லறத்தில் பாசம், பிரியம், பண்பு  அன்புடன்  உள்ளங்கள்  கலக்க வேண்டும்... அதாவது செம்மண்ணில் பெய்த நீர்போல.  இல்லறத்தின் ஆன்மா கணவன் மனைவிக்குள் வலுவான நீடித்த பிணைப்புக்கு பலமான அஸ்திவாரம் அன்பும், பாசமும் மட்டுமே. எவ்வளவோ செல்வமும், சுதந்திரமும் இருந்தாலும் இல்வாழ்க்கையில் பண்பும், பயனும் பெற அன்பும் அறனும் வேண்டும். இல்லறம் வெற்றி பெறுவதில்தான் வாழ்க்கையின் வெற்றி அடங்கி உள்ளது.

மணவாழ்வில் சுயநலம் குறுக்கிட்டால் வெற்றி வாய்ப்புகள் குறையும்.  கணவனும், மனைவியும் உண்மை உள்ளவர்களாக இருப்பதே இல்லறத்தின்உயிர்நாடி. உண்மையும், அன்பும் கொண்டு ஒருவருக்காக ஒருவர் வாழும் பொழுதுதான் இல்லறம் நிச்சயமாக இனிக்கும். பிணைந்து ஒன்றிய அவர்களின் அன்பே வாழ்வின் வெற்றிக்கான ஏணிப்படிகள்.

இனிமையும் மகிழ்வும் கொண்ட இல்லறவாழ்வில் இப்படித்தான் புதுமைகள் பூத்துக்கிடக்கும்.  இவ்வாறு எப்போதும் சந்தோச வானில் பறந்துகொண்டவர்கள் தான் ஆதவனும்- அஞ்சலியும். பெற்றவர்கள் உற்றவர்கள் உறவினர் நண்பர்கள் என அனைவரது ஆசியுடனும் ஆரம்பமானது இவர்களின் இனிய இல்லறம்.

எப்போதும் தான், தனது சௌந்தர்யம், தனது சௌகர்யம் என வாழப்பழகியவள்  அஞ்சலி, “கல்யாணம் செய்திட்டும் இப்பிடியே உன்னுடைய சுகங்களை மட்டுமே பாத்திட்டிரு,கட்டினவன் விட்டுட்டுப் போயிடுவான்”  என உறவினர்களில் உள்ள அவளது வயதுப் பெண்கள் கூட கேலி செய்வதுண்டு. அப்போதெல்லாம் அவள் துடுக்காகச் சொல்வாள், “ எனக்குப்பிறகு தான் என்னால யாரையுமே நேசிக்கமுடியும், அப்படியே இருந்தாலும் அவங்களே என்னை ரொம்ப நேசிக்கிறமாதிரி பண்ணிடுவேன் ” என்பாள்.

அவளுக்கு கல்யாணம் ஆனது, பார்த்ததும் அவளுக்கு ஆதவனைப் பிடித்துவிட்டது. வீட்டவர்கள் பேசி நல்ல நாளில் திருமணமும் இனிதே நடந்தேறியது. அவளுக்குப் புரியாமலே அவளிடம் பல மாற்றங்கள் உண்டானது, கணவனுக்காக பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்தாள். அவன் வரும் வரை சாப்பிடாது பார்த்துக் கொண்டிருக்கும் அவளைப் பார்த்து அவளது சகோதரியும் மைத்துனியும் கேலி செய்வதுண்டு. அவள் அதைப்பற்றி எதையும் கண்டுகொள்வதில்லை. அவளுக்கு சிந்தனை முழுவதும் கணவனின் இதத்திலேயே இருக்கும்.


காலையில் எழுந்தது முதல் அவனது தேவைகள் ஒவ்வொன்றையும் பார்த்துக்கொள்ளுவதுடன் அவனுக்கு பிடித்தவைகளை மட்டுமே சமைக்கவேண்டும் என்பதில் கவனமாக இருப்பாள். அவன் அணியவேண்டிய ஆடைகளைக்கூட தானே தெரிவுசெய்துவிட்டு, “இது உங்களுக்கு எடுப்பா இருக்கும், போடுறீங்களா”  என்பாள்.  பாசம் கொட்டும் மனைவியின் வார்த்தைகளில் மறுப்புசொல்ல யாருக்குத்தான் முடியும்? ஆதவன் மட்டும் என்ன விதிவிலக்கா?

சாப்பாட்டு விசயத்தில் அவள் காட்டுவது அதீத அக்கறையே.  அதிலும் வீட்டில் பலபேர் இருந்தபோதும் அவனுக்காக செய்வதை தானே செய்துவைத்துவிடுவாள். வெளியே  சாப்பிடவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தால் கூட ஆதவன் சாப்பிடாது வந்துவிடுவான். அலுவலகத்திற்கு கொண்டுசெல்லும் உணவு அதிகமாக இருந்தால் கூட அவனால் கொட்டிவிடமுடிவதில்லை.
“இன்றைக்கு சாப்பாடு கூட” என்பான் ஆதவன்.

“மதியநேரம் பசிக்கும் என வைத்தேன், அதற்கென்ன,மீதியைக் கொட்டுவதுதானே” என்பாள் அஞ்சலி.
“சாப்பாடு மட்டுமென்றால் கொட்டிவிடலாம், நீ அன்பையும் சேர்த்து கட்டிக்கொடுத்திருக்கிறாய், எப்படி கொட்டுவது” என்பான் கணவன். 
நாணத்தோடு கர்வமாக புன்னகைப்பாள் மனைவி.

சில நேரங்களில் கணவனே,  “எனக்காக ரொம்பவும் பாக்கிறாய், உன்னையும் பார்த்துக்கொள்” என்றாலும் அவள் கேட்பதில்லை. ஆதவனின் எண்ணங்கள் அவளுக்காகவே சுற்றவேண்டும் என்பதில் அவள் தீவிரமாக இருந்தாள். அதற்கான வழியாக அவள் கண்டுகொண்டது தான் இந்த ஆக்ரோசமான அன்பு காட்டல்.  ‘அன்பைக் காட்டி அன்பை பெறுவதில் தவறென்ன இருக்கறது’ என்றது அவளது மனம். அந்த உத்தியை வலுவாய் அவள் பற்றிக்கொண்டாள். அவளது இல்லறம் செழிக்க அந்த எண்ணமே உரமானது.

ஆம்! ‘அன்பு காட்டி அன்பை பெறுதல் என்பது இன்பத்தை தரவல்ல ஒன்றுதானே’. ‘அன்பு காட்டி அன்பை பெறுவது’ என்பது இல்லாது ‘அன்பு காட்டவேண்டும்’ என்பது மட்டுமே எதிர்பார்ப்பாக இருப்பதும் இன்றைய காலத்தில் பல திருமணங்களில் தோல்விக்கு காரணமாக அமையலாம். அன்பு காட் டிஅன்பை பெறுவோம், இது அனைவருக்கும் பொருந்தும் என்றாலும் இல்லறத்திற்கு அதிகமாய் பொருந்தும்.

கோபிகை


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.