யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை!!

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அர்ப்பணத்தோடு இருக்கும் கட்சிகளைத் தெரிவு செய்யுங்கள் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக அவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் மற்றும் செயலாளரின் ஒப்பத்துடன் வெளிவந்துள்ள குறித்த அறிக்கையில், “தமிழ் மக்களின் ஆயுத ரீதியான விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நாம் மீண்டும் ஒரு பொதுத் தேர்தலை எதிர்கொள்கின்றோம்.

இன்றைய நிலையில் தென்னிலங்கையில் பேரினவாத சக்திகள் பெருமளவில் உருத்திரண்டுள்ளன. இலங்கை ஒரு பௌத்த, சிங்கள தேசம் என்பதை உறுதிப்படுத்துவதில் அவை முனைந்து நிற்பது வெள்ளிடை மலையாக உள்ளது.

வடக்கிலே தமிழ் மக்கள் மத்தியில் காணப்படும் சமய, சாதீய முரண்பாடுகளையும் போரின் பின்னான வறுமை நிலையையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி அரசியல் களத்தில் காலூன்றிவிட வேண்டும் என்ற பெருவிருப்போடு தென்னிலங்கைக் கட்சிகளும் வட,கிழக்கிலுள்ள அவர்களின் முகவர்களும் களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், தமிழ் தேசிய நிலைப்பாட்டில் இருந்து செயற்படுவதாக சொல்லும் கட்சிகள், கட்சிகளுக்குள்ளான உட்பூசல்களாலும் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளாலும் பிளவுண்டு சிதறுண்டவைகளாக இத்தேர்தலை எதிர்கொள்கின்றன.

இன்றைய சூழ்நிலை பெரும் விரக்தி தருவதாக அமைந்திருப்பதால் தமிழ் மக்களாகிய நாம் தேர்தலில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கிவிடவோ அல்லது சலுகைகளை பிரசாரம் செய்யும் கட்சிகள் பக்கம் சாய்ந்து விடவோ உந்தப்படலாம். அது தவறு என்பதை நாம் தெளிவாக வலியுறுத்த விரும்புகின்றோம்.

எனவே, விரக்தி மன நிலையில் இருந்து விலகி வாக்களிக்க முன்வாருங்கள். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் அர்ப்பணத்தோடு இருக்கும் கட்சிகளைத் தெரிவு செய்யுங்கள். கட்சி, எல்லைகளுக்கப்பால் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அஞ்சாமல் குரலெழுப்பக்கூடிய ஆளுமைகளை அடையாளங்கண்டு வாக்களியுங்கள்!

இதன்மூலம், தேர்தலுக்கு முன்பு எம்மால் எட்டப்பட முடியாமல் போன ஒற்றுமையை தேர்தலின் பின்னாவது செயற்படு தளத்தில் எட்டமுடியுமென்று நாம் நம்புகின்றோம்.

30 ஆண்டு கால போராட்டத்தில் நாம் இழந்தவை பெரிது. அவற்றின் கைமாறு இன்றில்லாவிட்டாலும் என்றாவது கிட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.