இந்தியாவினால் இலங்கைக்கு நன்கொடை வழங்கப்பட்டது!!

 இலங்கையின் அபிவிருத்தி பணிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 517 பில்லியன் ரூபாய் பெறுமதியான ஒட்டுமொத்த திட்டங்களில் 92 பில்லியன்  ரூபாய் பெறுமதியான திட்டங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை அலகினை நிர்மாணிப்பதற்கான திட்ட வழிநடத்தல் குழுக் கூட்டடொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை அலகினை நிர்மாணிப்பதற்கான திட்ட வழிநடத்தல் குழுவின் கூட்டம், பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் திரு.வினோத் கே ஜேக்கப்  தலைமையில் கடந்த புதன்கிழமை இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

இந்த திட்ட அமுலாக்கலின் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது. இந்திய உயர் ஸ்தானிகராலயம், சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மற்றும் திட்ட முகாமைத்துவ திணைக்களம்,  நிதி அமைச்சின் கண்காணிப்பு பிரிவு, மற்றும் ஒப்பந்ததாரரான மல்வத்தை கொன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் ஆகியவற்றின் அதிகாரிகளும் மத்திய பொறியியல் உசாத்துணை பணியக திட்ட ஆலோசகரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த திட்டமானது 262 மில்லியன் இலங்கை ரூபாய் பெறுமதியுடன் உயர் பெறுபேற்றைக்கொண்ட சமூக அபிவிருத்தி திட்டம்  என்ற அடிப்படையில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சைக்கான உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் நவீனமயப்படுத்தல் மூலம் கிழக்கு மாகாணத்தை சூழவுள்ள மக்கள் நன்மையடைவர்.

மட்டக்களப்பில் சுகாதார பராமரிப்பு அலகுகளை நிர்மாணித்தமை, 1990 சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவை போன்ற உதவித்திட்டங்களை அமுல்படுத்துவதன் மூலமாக இலங்கையின் சுகாதார உட்கட்டமைப்பினை மேலும் வலுவாக்குவதில் இந்தியா தொடர்ந்தும் தனது உறுதிப்பாட்டை கொண்டிருக்கிறது.

கொவிட்-19 பரவல் நெருக்கடியான காலப்பகுதியில் இந்தியா 25 தொன்கள் நிறையுடைய அவசர மருந்துகள் மற்றும் மருந்துப்பொருட்களை இலங்கைக்கு வழங்கியிருந்தது.

அத்துடன் கண்டியிலுள்ள தேசிய வைத்தியசாலையில் கொவிட் தனிமைப்படுத்தல் விடுதி ஒன்றினை அமைப்பதற்காக சார்க் அபிவிருத்தி நிதியம் ஊடாக 1 மில்லியன் அமெரிக்க டொலர் விசேட உதவியாக வழங்கப்பட்டது.

இலங்கை அரசாங்கத்துடன் இந்திய அரசு மேற்கொண்டுவரும் மக்களை இலக்கு வைத்த அபிவிருத்தி ஒத்துழைப்பின் தொடர்ச்சியாக இந்த திட்டங்கள் அமைந்துள்ளன.

அதாவது,  இலங்கைக்கு இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட  ஒட்டுமொத்த திட்டங்களில் 92 பில்லியன் இலங்கை ரூபாய் பெறுமதியான திட்டங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.