அங்கொட லொக்காவின் உயிரிழப்பு குறித்த விசாரணைகள் – தமிழக சிபிசிஐடிக்கு மாற்றம்!!

இலங்கையின் பிரபல போதைப்பொருள் கடத்தல் குழுவின் முக்கியஸ்தரான அங்கொட லொக்காவின் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தமிழக பொலிஸார் குற்றப் பிரிவுக்கு (சிபி-சிஐடி) மாற்றப்பட்டுள்ளது.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரராக தேடப்பட்டு வரும் மதுமா சந்தன லசந்த பெரேரா என்ற அங்கொட லொக்கா (வயது 35)  மீது கொலை, கடத்தல் குற்றச்சாட்டுக்களும் உள்ளன.

கடந்த சில வருடங்களாக தலைமறைவாகியிருந்த இவர், இந்தியாவின் தமிழகத்தின் கோவையில் வசித்தாகவும், அண்மையில் உயிரிழந்தாகவும், இவரது உடல் மதுரையில் தகனம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

அந்த தகவல்களின்படி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கோவைக்கு தப்பிவந்த அவர், பிரதீப் சிங் என்ற பெயரில் போலி ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து தங்கியுள்ளார்.

அங்கொட லொக்கா போலி ஆவணங்களை பெறுவதற்கு மதுரையில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த பெண்ணான சிவகாமி சுந்தரி (36) என்பவரும், திருப்பூரில் வசிக்கும் ஈரோட்டை சேர்ந்த தியானேஸ்வரன் (32) என்பவரும் உதவியுள்ளனர்.

அங்கொட லொக்காவின் காதலியான கொழும்பைச் சேர்ந்த அமானி தாஞ்சி (27) என்ற பெண்ணும் இலங்கையிலிருந்து கடந்த மார்ச் மாதம் கோவை வந்து, அவருடன் வசித்து வந்துள்ளார். பின்னர், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக நாடு திரும்ப முடியாமல் இருந்த அமானி தாஞ்சி, இலங்கை குடியுரிமை கொண்டு தான் வசித்துள்ளார் என்பதம் தெரியவந்துள்ளது.

இதையடுத்து இறந்ததாக கூறப்படும் அங்கொட லொக்காவின் ஆவணங்களை பிரதீப் சிங் என்ற பெயரில் சமர்பித்த சிவகாமி சுந்தரி, அமானி தான்ஜி, தியானேஸ்வரன் ஆகிய 3 பேரையும் பொலிஸார் கைது செய்தனர்.

அத்துடன் அவர்கள் மீது சதி திட்டம் தீட்டுதல், போலி ஆவணங்களை தாக்கல் செய்தல், மோசடி உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்போது இலங்கை பொலிஸார், கோவை பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர். மேலும், உயிரிழந்தது அங்கொட லொக்கா தானா என அறிவியல் ரீதியாக நிரூபணம் செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உடல் தகனம் செய்யப்பட்டாலும், கோவை அரசு வைத்தியக் கல்லூரி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளதால், அந்த அறிக்கைக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இது இரு நாடுகள் சம்மந்தப்பட்ட வழக்கு என்பதால் மாநகர பொலிஸாரிடமிருந்து சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #ColomboBlogger இயக்குவது.