காதல் பெருங்கடலை..!

 


இந்த ஒரு கவிதைக்குள் 

அடக்கி விட முடிவதில்லை 

நமக்குள் பொங்கிப் பிரவாகிக்கும்

காதல் பெருங்கடலை...


காது மடல்களை உரசிக்

கடக்கும் மூச்சுக் காற்று

மனசுக்குள் ஏதேதோ 

ராகத்தில் இசைகிறது..


தொடக்கமும் முடிவுமற்ற 

பேரின்ப வெள்ளத்தில் 

சாரல் போட்டு ததும்புகிறது

காதல் குமிழிகள்..


காதலின் நெகிழ்ச்சியில்

பரவும் உணர்வுகளை

மொழிகளால் ஒருபோதும்

உரைக்க முடிவதில்லை...


அன்பில் காதலும்

காதலில் காமமும் 

பிணைந்து - யாவும்

அன்பின் வழியது ஆன பின்

ஒன்றோடொன்று ஒட்டியே 

விகற்பமற்ற இரட்டைக்கிளவியாய் 

பிரித்துப் பார்க்க முடிவதேயில்லை..


உள் நின்று இனிக்கும் 

நினைவுகள் எழுதுகோலில்

கவிதை மை நிரப்பி 

காகிதங்களில் சாரல் போடவும் 

மறுத்ததில்லை...


இந்தக் காதலில் 

நீயும் நானும் 

இரட்டைக்கிளவியாக.. 

நம் கல்லறை வரை 

காதலும் கவிதையுமாக..

பயணிப்போம் அன்பே.......


 💕 சங்கரி சிவகணேசன் 💕

      16.09.2020

Blogger இயக்குவது.