மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி,மன்னாரில் முத்து லெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 28 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்


பூநகரி - பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின் இரு மினி முகாம்கள் மற்றும் 62 காவலரண்கள் மீதான அழித்தொழிப்புத் தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் அவர்கள் உட்பட்ட மாவீரர்களின் 28 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். 


லெப்டினட் கேணல் சுபன் மன்னார் மாவட்டத்தின் விசேட தளபதியாக ஆனி 1989ல் சுபன் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன் மன்னார் மாவட்டத் தளபதியாக லெப்.கேணல்.விக்டர் பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே பல தாக்குதல்களில் பங்குகொண்ட சுபன் அவர்கள், சிலாபத்துறை முகாம் தகர்ப்பு தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடைபெற்ற தாக்குதலிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும், நானாட்டான் வங்காலை வீதியில் ரோந்துப் படையின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலிலும், கொக்குப்படையான் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும், ஆனையிறவு இராணுவ முகாம் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்தவர்.இவர் இறுதியாக இன்று, பூநகரியில், பள்ளிக்குடா இராணுவ முகாம் மீதான தாக்குதலில், இரண்டு சிறிலங்கா இராணுவ மினிமுகாம்கள், 62 காவலரண்களை தகர்த்தெறிந்த வீரப்போரில் லெப். கேணல் சுபன், மேலும் 5 போராளிகளும் வீரச்சாவை தழுவிக்கொண்டனர்.நாங்கள் ஒரு தேசிய இனம். எங்களுக்கானது எமது தேசம். அத்தேசத்தில் சுபீட்சான, சுதந்திரமானதொரு வாழ்வு வேண்டும்.காலம் காலமாய் அடக்குமுறைக் கரங்களுக்குள் நசிபட்டு கொஞ்சம் கொஞ்சமாக செத்ததுபோதும் என எண்ணிய காலத்திலிருந்து விடுதலைக்கான கோரிக்கைகள், உண்ணாவிரதம், சத்தியாக்கிரகம் என்று அகிம்சை வழிப் பாதைகள் வலிமையாய் ஆயுதங்களால் அடக்கப்பட்டு எங்களின் குரல்வளைகள் நசுக்கப்பட்டு மூச்சிடாது திணறியபோது அந்த ஆதிக்கக் கரங்களின் கோரப் பிடிகளை உடைத்தெறிய எழுந்த தமிமீழ மக்கள் இன்று ஆயுதம் ஏந்தி ஒரு மாபெரும் போராட்டத்திற்குள் விடுதலைக்கான தடைகளை ஒவ்வொன்றாய் அகற்றி வருகின்றனர்.1983ல் திருநெல்வேலியில் வழிமறித்துத் தாக்கும் யுத்தத்துடன் அனேக இளைஞர்கள் படிப்டியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டு போராளிகளாக மாறிக்கொண்டிருந்தனர். இராணுவமும் அரசும் தமிழீழ மக்களின் உரிமைகள் அத்தனையையும் ஒவ்வொன்றாய் பறித்தன.தமீழத்தின் அத்தனை தெருக்களிலும் இராணுவம் கால்பதித்துக் கொண்டிருந்தது, இவர்களைக்கண்டு நெஞ்சு கொதித் தெழுந்தவர்களில் ஒருவராய் சுபன் (சுந்தரலிங்கம்) 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.தமிழீழத்தில், மன்னார் மாவட்டத்தில், கள்ளியடி என்னும் கிராமத்தில் 1965ம் ஆண்டு, ஆடி மாதம், 21ம் திகதி பிறந்தார். விநாசித்தம்பிக்கும், மகிளம்மாவிற்கும் அன்பு மகனாக, பன்னிரண்டு சகோதரரிடையே இவர் பிறந்தார்.கள்ளியடியில் தனது ஆரம்பக்கல்வியை தொடங்கி,பின் அயல்கிராமத்திலுள்ள மகாவித்தியாலயத்தில் தனது கல்வியைத் தொடர்ந்தார்.இவருக்கு பெற்றோர் இட்டபெயர், சுந்தரலிங்கம். அன்பொழுக அழைக்கும் பெயர் மணியம். விடுதலை வீரனாய் விடுதலைப் புலிகளின் முகாமில் அவர் பெற்ற பெயர் சுபன்.


1984ம் ஆண்டு விடுதலைப் போராட்டத்தில்,ஆயுதப் போராளியாக தன்னை இணைத்துக்கொண்ட சுபன், இந்தியாவில் தனது ஆயுதப் பயிற்சியையும், பின்னர் விசேடகொமாண்டோப் பயிற்சியையும் முடித்து, தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலனாக கடமையாற்றினார்.பின்னர் களத்தில் போரிடுவதற்காய் தமிழீழம் வந்தார். தனது சொந்த இடமான மன்னாரிலேயே அப்போதைய மன்னார் மாவட்டத் தளபதியான விக்டருடன் தோளோடுதோள் நின்று போராடினார்.சமாதானக் கொடியேற்றிவந்த இந்திய இராணுவத்தினருடன் கடுமையான போராட்டம் நடாத்த வேண்டியிருந்த காலத்தில் மிகவும் திறமையாகப் போராடி பல களங்களில் வெற்றிவாகை சூடி 1989ம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் விசேட தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

பல தாக்குதல்களில் பங்கு கொண்ட சுபன் சிலாபத்துறை முகாம் தாக்குதலிலும், மன்னார் பழைய பாலத்தில் நடந்த தாக்குதல்களிலும், கஜவத்தை இராணுவமுகாம் தகர்த்த தாக்குதலிலும் சிறப்புப் பங்கு வகித்ததுடன் இரண்டு மினி முகாம்களையும், 62 காவலரண்களையும் தகர்த்து பெரும்தொகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட மன்னார் பூநகரி தாக்குதலில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார்.தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீர மறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.