விக்னேஸ்வரன் மீதான விமர்சனம் இனவெறிச் சிந்தனையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது- ஸ்ரீகாந்தா!!

 


அண்மைக்காலமாக சி.வி.விக்னேஸ்வரன் மீதான விமர்சனங்கள் இனவெறிச் சிந்தனையை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஶ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஊடக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாணப் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் நிகழ்த்திய நாடாளுமன்ற உரைகள் கடந்த சில நாட்களாக பாரிய சர்ச்சையின் மையப்பொருளாக சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் உருமாற்றப்பட்டுள்ளன.

விக்னேஸ்வரனுக்கு எதிராக நாடாளுமன்றத்திற்குள்ளே, ஆளும் மற்றும் எதிர்க்கட்சி என்ற நிலையான வேறுபாடுகளைக் கடந்து உக்கிரத்தோடு தொடுக்கப்பட்டிருக்கும் கண்டனக் கணைகள் அனைத்தும், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கும் அடிப்படை மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகவும் இனவெறிச் சிந்தனையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றன.

இத்தனைக்கும் விக்னேஸ்வரன் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு உறுப்பினர் மாத்திரமின்றி, அவர் தெரிவித்த கருத்துக்கள் எதிலும் இனத்துவேசம் என்பது துளியளவுகூட இருந்திருக்கவில்லை.

மாறாக, தன்னைத் தெரிவுசெய்த மக்கள் சார்ந்த இனத்தின் வரலாற்றுத் தொன்மையையும், அதன் தாய் மொழியின் பெருமையையும் நாகரீகத்தோடு கூடிய வார்த்தைகளில் அவர் நாசூக்காக வெளிப்படுத்தியிருந்தார். அது அவரது உரிமையும் கடமையுமாகும்.

இருந்தும், ஆளும் கட்சி, எதிர்கட்சி என்ற வேறுபாடு இன்றி மிரட்டலும் சண்டித்தனமும் நிறைந்த தொனியில், இந்த இரண்டு தரப்பிலிருந்தும் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன என்றால், இவையனைத்தும் தமிழ் மக்களுக்கும் அவர்களால் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் பிரதிநிதிகளுக்கும் ஒரு அரசியல் செய்தியை திட்டவட்டமாக சொல்லிவைக்க முயன்றிருக்கின்றன என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது.

தமிழர் தரப்பிலிருந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் எவராவது, வரலாற்றைச் சுட்டிக்காட்டி சுய நிர்ணய உரிமை பற்றியெல்லாம் பேச முயன்றால், அவற்றை சகித்துக்கொள்ள இயலாது எனவும் அப்படிப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கமுடியாது என்பதுடன் அவர்களின் நடவடிக்கைகளுக்கு அவர்களைத் தெரிவுசெய்த மக்களும் விலைகொடுக்க வேண்டியிருக்கும் என்ற தோரணையில் ஓர் அரசியல் அராஜகமே அரங்கேற்றப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில், தனியொரு உறுப்பினராக இருந்தாலும் கட்சியொன்றின் தலைவர் என்ற முறையில், நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு இசைவாக, விக்னேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முன்வரிசை ஆசனத்தைக்கூட பறித்தெடுத்து, அவரை இரண்டாம் வரிசைக்குத் தள்ளிவிடுவதற்கான முஸ்தீபுகளும் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன.

இந்த நாடாளுமன்றக் களேபரத்தில் முன்னணியில் நிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த சரத் வீரசேகரவின் நடத்தை ஆச்சரியத்திற்கு உரியதல்ல. அவரைப் போன்ற சிங்கள தேசபக்தரிடமிருந்து வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது.

அதேநேரத்தில் 2010 ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தான் யார் என்பதை தமிழ் மக்களுக்கு தெட்டத்தெளிவாக ஞாபகப்படுத்தியுள்ளார்.

இந்த விவகாரத்தில், வாய் திறந்து பேசாமலே செயற்பட்டுக் கொண்டிருக்கும் மிக முக்கியமான சூத்திரதாரி எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சரத் பொன்சேகாவைப் போலவே கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்றிருந்தவர். 2010, 2019 தேர்தல்களில் இந்த இருவருக்கும் தமிழ் மக்கள் கொடுத்த பேராதரவு வெறும் செல்லாக் காசு என இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இது, மஹிந்த ராஜபக்ஷ, கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரை எதிர்த்து தமிழ் மக்கள் அளித்த எதிர்மறையான வாக்குகள் தான் சரத்பொன்சேகாவுக்கும் சஜித் பிரேமதாசாவுக்கும் கிடைத்த தோல்விகளில் கூட, ளுர் மரியாதையை இணைத்திருந்தன என்பதை நினைத்துப் பார்க்கக்கூட இந்த இருவரும் இப்பொழுது தயாராக இல்லை.

இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள தமிழ் தோழர்களைச் சமாளிப்பதற்காக சால்ஜாப்பு அறிக்கை ஒன்று நாளையே வெளிவரலாம். ஆனால் உண்மை உறங்கி விடாது.

இந்த நாட்டில் நாம் எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருக்கலாம். ஆயினும், நாங்கள் அரசியல் அநாதைகள் அல்ல” என அஙிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.