நாளை வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்பு போராட்டம்!!

 


இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதனால் மீனவர்களது வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உபகரணங்கள் நாசம், ஆகியவற்றைக் கண்டித்து வடமராட்சி மீனவர்கள் மெளன கவனயீர்பு போராட்டம் ஒன்றை நாளை (திங்கட்கிழமை) முன்னெடுக்கவுள்ளனர்.

வட.மராட்சிக் கடற்ப்பரப்பில் கடந்த சில தினங்களாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரையில் இருந்து சுமார் ஒன்பது கடல் மைல் தூரத்தில் நின்று மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட றோளர் படகினைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் வடமராட்சி மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கடலில் விடப்படும் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் செய்து வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக மிக அதிகளவில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்று வருகிறது. இதனைக் கண்டித்து வடமராட்சி மீனவர்கள், வாயை மூடிக் கட்டி மெளன கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை நாளை முன்னெடுக்கவுள்ளனர்.

நல்லூர் முன்றலில் இருந்து காலை பத்து மணிக்கு ஆரம்பமாகும் குறித்த மெளன கவனயீர்ப்பு பேரணியானது, இந்தியத் தூதரகத்தைச் சென்றடைந்து அங்கு இந்தியத் துணைத் தூதரிடம் மகஜர் ஒன்ரைக் கையளித்து, இந்திய மீனவர்களது அத்துமீறல் தொடர்பில் தெரியப்படுத்தி, இதனால் தமது வாழ்வாதாரப் பாதிப்பு மற்றும் உடமைகள் சேதமாக்கப்படுவது தொடர்பில் எடுத்துக் கூறி எல்லை தாண்டுவதை தடுத்து நிறுத்துமாறு துணைத் தூதுவரிடம் கோரவுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நீரியல் வளத்துறை அமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளனர். பின்னர் நீரியல் வளத்துறை திணைக்களம், மாவட்டச் செயலகம் இறுதியாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று ஆளுநருக்கு மகஜர் கையளித்து தமது போராட்டத்தை நிறைவு செய்யவுள்ளனர்.

வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்கள், ஒன்றுகூடி நடத்திய கலந்துரையாடலிலேயே குறித்த முடிவு எட்டப்பட்டதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் வ.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.


Powered by Blogger.