தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை இராஜினாமா செய்தார்!
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தன் தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சுயவிருப்புடனும் தனது பொதுச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அந்த வகையில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் பின்னர் தேசியப் பட்டியல் தொடர்பாக இடம்பெற்ற சர்ச்சையையடுத்து இப்பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தன் தனிப்பிட்ட விடயங்கள் தொடர்பாகவே தான் பதவியைத் துறப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நான் கடந்த 2014ம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளராகச் செயற்பட்டு வந்துள்ளேன். எனது செயற்பாடுகளுக்கு சகல வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நிலையில், என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக இப்பதவியை தொடர்ந்தும் வகிக்க முடியாதுள்ளேன் என்பதனைத் தெரிவித்துக் கொள்வதோடு, நான் இப்பதவியை இன்றிலிருந்து துறக்கின்றேன் என்பதனையும் தங்களுக்கு அறியத் தருகின்றேன்.
எனவே, எனது இப்பதவி துறப்பை ஏற்றுக் கொண்டு இது தொடர்பான ஏனைய விடயங்களை உரியவாறு கையாளுமாறு தங்களை மிக அன்புடன் வேண்டுகின்றேன்.என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை