வவுனியாவில் பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களை வீடு வீடாக சென்று அழைத்து வந்து பரீட்சை நடத்திய பாடசாலை!!

 ஹர்த்தால் காரணமாக பாடசாலைக்கு செல்லாத மாணவர்களை வீடு வீடாக சென்று அழைத்து வந்து வவுனியா வடக்கு பாடசாலை ஒன்றில் பரீட்சை நடைபெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வடக்கு – கிழக்கில் நினைவு கூரும் உரிமையை வலியுறுத்தியும், அரசின் அடக்கு முறைக்கு எதிராகவும் இன்று ஹர்த்தால் இடம்பெற்றது.

இதன் காரணமாக பாடசாலைகளுக்கு மாணவர்களது வருகை மிகவும் குறைவாக இருந்தது.

இந்நிலையில் வடமாகாண கல்வித் திணைக்களத்தினால் தரம் 11 மாணவர்களுக்கு சமயம் மற்றும் தொகுதி -1 பாட பரீட்சைகள் இன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைவாக பாடசாலைகளுக்கு வலயக் கல்வித் திணைக்களத்தால் காலையில் பரீட்சை வினாத்தாள்களும் விநியோகிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாடசாலைக்கு வருகை தந்த தரம் 11 மாணவர்களுக்கு பரீட்சைகள் நடைபெற்றன.

இந்நிலையில், வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் உள்ள வவுனியாவிற்கு அண்மித்த பிரபல பாடசாலை ஒன்று ஹர்த்தால் காரணமாக பாடசாலைக்கு சமூகமளிக்காத மாணவர்களை வீடு வீடாக சென்று அழைத்து வந்து அந்த மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள்களை வழங்கி பரீட்சை நடத்தியுள்ளது.

இதேவேளை, ஹர்த்தால் காரணமாக வடக்கில் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என வடமாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.