காட்டுத் தீயாய் பரவிய 'இந்தி தெரியாது போடா’ டி-சர்ட்!

'இந்தி தெரியாது போடா' என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் புகைப்படம் தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பிரபல இசையமைப்பாளர் மகனான யுவன் சங்கர் ராஜா மற்றும் மெட்ரோ நடிகர் ஷிரிஸ் இருவரும், திருவள்ளுவர் புகைப்படத்துடன் கூடிய ’ஐ அம் எ தமிழ்பேசும் இந்தியன், இந்தி தெரியாது போடா’ ஆகிய வாசகங்கள் இடம் பெற்ற டி-சர்ட் அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தனர். நேற்று முன்தினம் மாலை 5.37 மணிக்கு ஷிரிஸ் இந்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். புகைப்படத்தின் கேப்ஷனாக, ஆழமான விவாதம்.... நல்ல விஷயங்கள் நம் வழியில் வரும்.... என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த டி -சர்ட் இளைஞர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில், நேற்று முழுவதும் பல்வேறு தரப்பினரும் இதுபோன்ற டி-சர்ட்டை வாங்கி அணிந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டு வந்தனர். அதோடு இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்கை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்கினர். இந்த ஹேஷ்டேக்கில் சுமார் 1.8 லட்சம் ட்வீட்டுகள் இடப்பட்டுள்ளன.



தமிழ் ஆங்கிலம் இரண்டும் கலந்து இந்தி தெரியாது போடா, நான் தமிழ் பேசும் இந்தியன், நான் இந்தியன், ஆனால் இந்தி பேசமாட்டேன் ஆகிய வாசகங்களுடன், பெரியார், திருவள்ளுவர், கலைஞர், பாரதியார் ஆகியோரின் புகைப்படங்கள் பொறிக்கப்பட்ட டி-சர்ட் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.

இந்நிலையில், இந்த நடவடிக்கைக்குப் பின்னால் திமுக இருப்பதாக பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. அதோடு பதிலடியாக திமுக வேணாம் போடா என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை நடைபெற்ற காணொளி ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ‘இந்தி தெரியாது போடா’ டி சர்ட்டை அணிந்து கலந்துகொண்ட புகைப்படமும் வெளியானது.



இந்தளவுக்கு ஒரே நாளில் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்த இந்த டி-சர்ட்டை 4 டிசைன்களில் வடிவமைத்தது ஒரு பெண் தொழில்முனைவோர் என்பது தெரியவந்திருக்கிறது. பெயர் குறிப்பிட விரும்பாத அந்த பெண், சனிக்கிழமை மாலை முதல் இந்த டி-சர்ட்க்காக ஏராளமான ஆர்டர்கள் வந்ததாகக் கூறியுள்ளார்.


டி-சர்ட்கள் தமிழகத்தின் "தற்போதைய மனநிலையை" பிரதிபலிக்கின்றன, இது இந்தி திணிப்புக்கு எதிரானது என்று ட்விட்டர் பயனர்கள் தெரிவித்து வருகின்றனர்.




இந்தி திணிப்புக்கு எதிராக ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆவது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, “#ஹிந்திதெரியாதுபோடா என்று சொல்வதை விட #தமிழ்கற்றுக்கொள்ளவாடா என்பதே தமிழனுக்கு சிறப்பு. இதை தான் தேசிய கல்விக் கொள்கை சொல்கிறது. தமிழை வளர்க்கும் சிந்தனை இல்லாதவர்களுக்கு இது எங்கே தெரிய போகிறது?” என்று குறிப்பிட்டுள்ளார்.



அதேசமயத்தில் திமுக எம்.பி.கனிமொழி, “ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தித் திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல” என்று குறிப்பிட்டுள்ளார்.


-கவிபிரியா

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.