வடமாகாண அரச சாரதிகள் சங்கம் சுகயீன விடுப்பு போராட்டத்துக்கு தயாரானது!

 வடமாகாண சுகாதார சேவைகள் சாரதிகள் தம்மை சுகாதார சேவைக்குள் இருந்து சுகாதாரத் துறைகள் தவிர்ந்த வேறு திணைக்களங்களிற்கு இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் (08) மாகாணம் தழுவிய சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சுகாதர சேவைகள் சாரதிகளின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர்களது இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தி எதிர்வரும் 12ம் திகதி ஒருநாள் அடையாள சுகயீன விடுப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண அரச சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் வடமாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் நேற்று (09) வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸிடம் கோரிக்கை முன்வைத்து மகஜர் ஒன்றை கையளித்து தமது போராட்ட முடிவையும் அறிவித்துள்ளனர்.

ஆளுநருக்கு கையளித்த மகஜரில், “இரண்டு வருடங்களாக இணைந்த சேவை சாரதிகளின் வருடாந்த இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் 21.01.2020 அன்று கடிதம் மூலம் ஜனாதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து வருடாந்த இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிற்கு முகவரியிட்டு எமது சங்கத்துக்கு பிரதியுடன் பதில்க் கடிதம் அனுப்பப்பட்டது. அதன்படி 09.09.2020 அன்று தங்களுடனான எமது சங்கப் பிரதிநிதிகளின் சந்திப்பில் குறித்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து தங்களின் அனுமதியோடு, இடைநிறுத்தப்பட்டிருந்த வருடாந்த இடமாற்றம் 16.09.2020 நடைமுறைக்கு வந்திருந்தது.

ஆனால் இடமாற்றம் வழங்கப்பட்ட 35 சுகாதார திணைக்கள சாரதிகளில் 25 சாரதிகள் இடமாற்ற கட்டளையை பின்பற்றாமல், தங்களை வேறு திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்வதை நிறுத்துமாறும் தங்களது இணைந்த சாரதி சேவையை மூடிய (Clossed) சுகாதார சேவையாக்குமாறு கோரிக்கை முன்வைத்து சுகயீன விடுமுறைப் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுகயீன விடுப்பு போராட்டத்தை செய்யவுள்ளோம்” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வடமாகாண அரச சாரதிகள் சங்கச் செயலாளர் எஸ்.சுதர்சன் “உதயன் ஒன்லைனிடம்” தெரிவிக்கையில், “கடந்தகாலங்களில் சுகாதார திணைக்கள சாரதிகள் தம்மை இடமாற்றம் செய்ய வேண்டாம் என்று அமைச்சர்களை நாடி இடமாற்றங்களை தவிர்த்து வந்தனர். இப்போது இடமாற்றம் பெறாமல் கூடிய சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்காக தமது சாரதி சேவையை மூடிய சுகாதார சேவையாக்குமாறு கோருகின்றனர். வடமாகாணத்தில் நோயாளர் காவு வண்டிகளை ஓடக்கூடியவர்கள் தாங்களே என்று தெரிவித்து இடமாற்றத்தை தவிர்க்க முயற்சி செய்கின்றனர். எனவே இந்த செயற்பாடுகளை கண்டித்து, இடமாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு சுகயீன விடுப்பு போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம்” என்றார்.Blogger இயக்குவது.