ஊடகவியலாளருக்கு கொரோனா

 


அரசாங்க தகவல் திணைக்களத்தில் கடந்த 13 ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளாரா என்பது தொடர்பில் ஆராய்வதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை வௌியிட்டுள்ளது.

அன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற ஊடகவியலாளர்களின் அனைத்து தகவல்களும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் சுகாதாரப் பிரிவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் ஊடகவியலாளருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் முடிவுகள் கிடைக்கும் வரை ,குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டவர்களை வௌி இடங்களுக்கு செல்லாது பாதுகாப்பாக வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை இணைப் பேச்சாளர்களான கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ரமேஷ் பத்திரன ஆகியோரின் தலைமையில் கடந்த 13 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக்க கலுவெவவும் ஊடகவியலாளர்கள் சிலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்ட ஊழியர்கள் 130 பேருக்கு இன்று PCR சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் ஊழியர் ஒருவருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டமையால், இன்று PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதனிடையே, கொழும்பு மெனிங் சந்தையிலுள்ள சில வர்த்தக நிலையங்கள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன.

COVID-19 தொற்றாளர் ஒருவருடன் நெருங்கிப் பழகிய ஒருவர் சந்தைக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இரத்மலானை செஞ்சிலுவை சங்க வீடமைப்பு திட்டத்திலுள்ள 63 வயதான பெண்ணொருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமையால், அவருடன் பழகிய 10 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இரத்மலானை சுகாதார அதிகாரிகளும் கல்கிசை பொலிஸாரும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வீடமைப்புத் திட்டத்தில் இன்று தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, கேகாலை மாவட்டத்தில் 15 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக 636 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

வயிற்று வலி காரணமாக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொலன்னறுவை அரலகங்வில பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கே கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொலன்நறுவை வைத்தியசாலையின் 22 ஆம் இலக்க விடுதிக்கு நோயாளர்களை அனுமதிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் மேலும் 61 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 3 பேர் மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனைய 58 பேரும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களாவர்.

இதற்கமைய, மினுவாங்கொடை கொத்தணியில் இதுவரை 1850 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 5,305 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 1,907 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.