இன்று தமிழீழ மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் நினைவு நாள்.


தமிழினியின் நூலை நாம் புரிந்து கொள்வது எப்படி?


தமிழினி எழுதியதாகக் கூறப்படும் நூலை “அவர்தான் எழுதினாரா?” என்ற பகுப்பாய்வை நாம் செய்வதற்கு பதிலாக அவரது மரணத்தை நாம் ஆய்வு செய்வதனூடாக பல உண்மைகளைப் புரிந்து கொள்ளமுடியும்.


 


இனஅழிப்பு வதைமுகாமில் வைத்து கொடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு அதன் விளைவாக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு இனஅழிப்பு அரசால் நுட்பமான முறையில் படுகொலைசெய்யப்பட்டவர் தமிழினி.


 


‘புனர்வாழ்வு ‘ என்ற பெயரில் இனஅழிப்பு வதைமுகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகளும், இறுதி இனஅழிப்பின் போது வன்னி நிலப்பரப்பில் சுத்தமான குடிநீரில்லாமலும், இராசயான ஆயுதங்களின் பாவனையாலும், தொடர்ந்து உப்புநீரை அருந்தியதாலும் நீண்ட நாள் திட உணவை உண்ணாததன் விளைவாகவும் எமது மக்களும் பல மோசமான உடற் தாக்கங்களை சந்தித்து நோயாளிகளாகி அதன் விளைவாக மரணத்தை தினமும் சந்தித்து வருகிறார்கள்.


 


குறிப்பாக சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய். இவை எதன் விளைவு என்பதை மேற்படி காரணங்களை வைத்து மிகச் சுலபமாகவே அடையாளம் காண முடியும். இதற்கு பெரிய மருத்துவ அறிவு ஒன்றும் தேவையில்லை.


 


இனஅழிப்பு அரசு திட்டமிட்ட இனஅழிப்பு நோக்கில் அவர்களுக்கு எந்த பிரத்தியேக சிகிச்சையும் செய்யவில்லை.


 


ஒரு தலைமுறையே இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இனஅழிப்பின் மிக நுட்பமான உத்தியாகவே இதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இது உண்மையான நல்லிணக்கத்தை பேணாத இனஅழிப்பு நோக்கிலான அரச எந்திரத்தின் செயற்பாடு என்பதை நாம் பல தடவை வலியுறுத்திவிட்டோம். இதைத்தான் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு என்று வரையறுக்கிறோம்.


 


எனவே தமிழினியின் மரணம் இயற்கை மரணம் அல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் நாம் திருந்துவோம். இனஅழிப்புக்குள்ளாகி தொடர்நது அதற்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு இனமாக நாம் பாவிக்கும் ஒவ்வொரு வார்த்தைகளும் கவனமாக இருக்க வேண்டும். அதுதான் எமது நீதிக்கான அடிப்படை. மற்றவர்களிடம் நீதியை கேட்கும் அறமும் உரிமையும் அப்போதுதான் எமக்கு உரித்தாகிறது.


 


வன்னி இறுதி இனஅழிப்பிற்கு நேரடியாக முகம் கொடுத்த மூன்று இலட்சம் மக்களின் சுவாசப் பாதையில் இரசாயன நுண் உலோக பதார்த்தங்களின் தாக்கம் நிரந்தர ஆதாரமாகத் தேங்கி உள்ளது.


 


விளைவாக இவர்களின் குருதியில் இப்பதார்த்தங்களால் வாழ்தகவைக் குறைக்கும் நச்சு பதார்த்தம் பரவியுள்ளது. இதனை Genocidal Factors எனலாம்.


 


இதனால் அவர்களின் உடலில் இயற்கையாகக் காணப்படும் Co enzyme Q இன் அளவு குறைவாகக் காணப்படும். இது இன அழிபிற்கு ஒரு உயிர் வாழும் ஆதாரமாகும்.


 


மேலும் முள்ளிவாய்க்காலில் உயிர் தப்பியவர்களின் உடலில் உள்ள எறிகனைச் சிதறல்கள் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுவீச்சின் சிதறல்கள் என்பனவும் உயிர்வாழும் ஆதாரங்களாகும் (living genocidal bio makers).


 


இது நாம்செய்த ஒரு ஆய்வின்: முடிவு மட்டுமல்ல கடந்த வருடம் சமாதானத்திற்கான தமிழ் மருத்துவர்கள் முன்வைத்த கருத்தும்கூட…


 


மே‬ 18 இற்கு பிறகு அதிகளவில் போராளிகளும் மக்களும் புற்றுநோயால் சிறுநீரக செயலிழப்பால் சாகும் கதையின் பின்புலம் இதுதான். இனிச் சொல்லுங்கள் தமிழினியின் சாவு இயற்கை மரணமா ? இனஅழிப்பா?


 


தமிழினி மரணமடைந்த மறுநாள் இனஅழிப்பு வதை முகாமில் சித்திரவதைக்குள்ளாகி விடுவிக்கப்பட்ட முன்னாள் மருத்துவ போராளி சசிதரன் தாருஜா மர்மமான முறையில் மரணத்தை தழுவினார். அவர் உடலில் புற்றுநோய்க்கான காரணிகள் இருந்ததை அவர் இறப்புக்கு பின் நாம் அடையாளம் காண முடிந்தது. இவர் உடலில் living genocidal bio makers என அடையாளம் காணப்படும் கிளஸ்ரர் குண்டுகள் ஏற்கனவே அகற்றப்படாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.


 


தாருஜாவின மரணத்திற்கு அடுத்த நாள் தமிழகம் மதுரையில் ஒரு அரச மருத்துவமனையில் புற்றுநோய் தாக்கத்தின் விளைவாக இறந்து போனாhர் அன்பரசி படையணி போராளியான இளவேணி என்கிற கந்தப்பு கல்பனா.


 


இவை இனஅழிப்பு மரணங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து கொண்டிருக்கும் எமக்கு மட்டுமே தெரிந்த தகவல்கள் அல்ல. ஓரளவு ஊடகங்களில் வெளிவந்த தகவல்கள்தான்.


 


எம்மிடம் இருக்கும் தரவுகளின் – ஆவணங்களின் பிரகாரம் 2009 மே 18 இற்கு பிறகு புற்றுநோயின் தாக்கத்திற்கு பலியான 99 வது போராளி தமிழினி. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த கணம் வரை மேலும் பலர் புற்றுநோய்க்குப் பலியாகியிருக்கிறார்கள். போராளிகள் மட்டுமல்ல பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் தினமும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.


 


சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய் போன்றவற்றால் வகைதொகையில்லாமல் நம்மவர்கள் இறந்து போவது சாதாரணமானதா? இதைக் கணிப்பதற்கு சாதாரண பொது அறிவே போதுமானது. இதைத்தான் மேலே மிகச் சுருக்கமாக எளிமையாக விளக்கியுள்ளோம்.


 


தடைசெய்ய்பபட்ட ஆயுத பாவனை மற்றும் இராசயன குண்டுகள் மற்றும் கிளஸ்டர் குண்டுகள் இறுதி இனஅழிப்பில் பாவிக்கப்பட்டதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளன.


இது மனித உடலில் எத்தகைய பின்விளைவை தரும் என்பதற்கு உலகளவில் நிறைய தேசங்கள் சாட்சியாக உள்ளன.


 


அத்தோடு கொடிய சித்திரவதை மற்றும் உளத்தாக்கங்களுடன் போதிய குடிநீர் மற்றும் உணவை எடுத்து கொள்ளாததன் விளைவாக ஏதோவொரு உடற்தாக்கத்தினை எமது மக்கள் சுமந்து கொண்டுதான் இருக்கிறார்கள். விளைவாக மரணத்தை தினமும் ஏதோவொரு வழியில் எதிர்கொண்டபடியே இருக்கிறார்கள்.


 


தமிழர் தரப்பு நடந்த இனஅழிப்புக்கு அனைத்துலக விசாரணையை கோரும் அதே சமயம் அனைத்துலக மருத்துவ குழு ஒன்றின் கீழ் இறுதி இனஅழிப்பிற்கு முகம் கொடுத்த மக்களையும் போராளிகளையும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அந்த கோரிக்கை வைக்கப்படவில்லை.


 


பெரும் போர் நடந்து முடிந்த தேசங்களில் ஐநாவின் அமைதிப்படை சென்று பணியாற்றுவதும் ஏதிலிகள் முகாம்களை ஐநா பொறுப்பெடுப்பதும் வழமை. ஆனால் சிறீலங்காவில் என்ன நடந்தது?


 


குறிப்பாக 2009 மே மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் சுயாதீன ஊடகவியலாளர்கள் தொண்டு நிறுவனங்கள், மனித உரிமையாளர்கள் குறிப்பாக அனைத்துலக மருத்துவர்கள் மக்களை சந்திப்பது முற்றாகத் தடுக்கப்பட்டிருந்தது. இது ஒன்றே போதும் இலங்கை அரசை இனஅழிப்பு குற்றவாளியாக்க..

ஆனால் ஐநா உட்பட எல்லோருமே மவுனமாக இருந்து இந்த இனஅழிப்புக்கு உடந்தையாக இருந்ததுதான் வரலாற்று சோகம்.


 


ஐநாவின் இந்த மவுனமே தமிழின அழிப்பின் முதன்மை குற்றவாளியாக நாம் ஐநா வை குறிப்பிட முக்கிய காரணமாகும்.


 


Doctors Without Borders/ Médecins Sans Frontières (MSF) போன்ற அனைத்துலக மருத்துவ குழுக்களை அன்றே வனனிக்குள் நழைய ஐநா அனுமதித்திருந்தால் எமது மக்களின் – போராளிகளின் இன்றைய மரணங்களை தடுக்கும் வலல்மையை நாம் உருவாக்கியிருக்கலாம்.


 


ஆனால் மறுவளமாக எப்படி இனஅழிப்பு அரசு இதை அனுமதிக்கும் என்ற கேள்வியை நாம் மறுதலிக்கவில்லை.


 


Doctors Without Borders/ Médecins Sans Frontières (MSF) போன்ற மருத்துவர்கள் எமது மக்களை சுயாதீனமாக மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தினால் இராசாயன ஆயுதங்களின் பாவனை தொடக்கம் இனஅழிப்பு நோக்கில் நடந்த பாலியல் வல்லுறவு குற்றங்கள் வரை மட்டுமல்ல உளவள ஆலோசனை என்ற பெயரில் எமது போராளிகள் உளவியல் இனஅழிப்பு நோக்கில் ஊனப்படுத்தப்பட்டதையும் கண்டறிந்திருப்பார்கள்.


 


அது சிங்களத்தை இனஅழிப்பு குற்றவாளிகளாக்கும் போதிய ஆதாரங்களாக இருந்திருக்கும்.

ஏனவேதான் ஆறு ஆண்டுகளாகியும் நடந்த இனஅழிப்பை மறைக்கவும் – தொடர்ந்து இனஅழிப்பை நடத்தவும் எதையுமே “உள்ளக” அளவில் செய்ய முற்படுகிறது இனஅழிப்பு அரசு.


 


ஆனாலும் தொடாந்து ஒரு அனைத்துலக தலையீட்டை கேட்க வேண்டியது நமது கடமை.


 


இறுதி இனஅழிப்புக்கு முகம் கொடுத்ததன விளைவாக புற்றுநோய; சிறுநீரக செயலிழப்பு உட்பட பல விதமான நோய்களை எதிர்கொண்டு மரணத்தை சந்திக்கும்; நமது மக்களை காக்கும் பொறிமுறை இது என்பது மட்டுமல்ல இனஅழிப்பை அம்பலப்படுத்த இது ஒரு கருவியாகவும் இருக்கும்.


பேசும் பரப்பை விட்டு வெளியே செல்லும் கருத்தாக இருந்தாலும் இனஅழிப்பை விளங்கிக் கொள்ள பெண்களை குறிவைத்து நடக்கும் வேறு சில இனஅழிப்பு அம்சங்களையும் பார்ப்பது மேலதிக புரிதலுக்கு வழி வகுக்கும் என்று நம்புகிறோம்.


 


‘எம்மிடம் இருக்கும் ஆவணங்களின் அடிப்படையில் 2009 மே இற்கு பிறகு தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் 179 தமிழ் பெண்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் – அல்லது தற்கொலைக்கு தூண்டப்பட்டு தம்மை அழித்திருக்கிறார்கள். இன்னும் பல நூறு பெண்கள் பல பாலியல் வல்லுறவுகளை சந்தித்து அல்லது வேறுவகையான தொந்தரவுக்குள்ளாகி தம்மை அழிக்க முற்பட்டு உயிர்பிழைத்து நடைப்பிணமாக வாழ்கிறார்கள்.


 


போர் முடிந்ததாகக் கூறப்படும் குறிப்பான ஆறு ஆண்டுகளில் ஒரு இனக்குழுமத்தின் சனத்தொகை மற்றும் வாழ்வியல் சுட்டெண் அடிப்படையில் பார்க்கும்போது இவ்வளவு பெண்கள் பாதிக்கப்படுவதென்பது அப்பட்டமான இனஅழிப்புக் கூறுகளை மையமாகக்கொண்டதென்பதை தனியாக விளக்க வேறு வேண்டுமா?


 


தமிழீழ நடைமுறை அரசில் பாலியல் வல்லுறவு மற்றும் பெண்கள் மீதான அடக்குமுறை என்பது அறவே ஒழிக்கப்பட்டிருந்தது. அதற்கான எந்த புறச்சூழலும் உருவாகாமல் புலிகள் தமது கட்டமைப்பை வளர்த்திருந்தார்கள். ஏனென்றால் அது தமிழர்களுக்கான அரசு – தமிழரசு.


 


அப்பட்டமான இனஅழிப்பு நோக்கங்களுடன் ஒரு போரை நடத்தி முடித்த அரசு எப்படி எமது பெண்கள் பாதுகாப்பாக வாழும் ஒரு சூழலை ஏற்படுத்தும்? அது எப்படி தமிழர்களுக்கான அரசாக இருக்க முடியும்? எனவே கட்டற்ற பாலியல் கலாச்சாரத்தையும் போதைபொருள் பாவனைகளையும் தமிழர் தேசத்திற்குள் கடத்துவதனூடாக ஒரு குற்ற சமூகத்தை சிங்களம் இனஅழிப்பு நோக்கங்களுடன் உருவாக்கிவிட்டிருக்கிறது. விளைவாக நாம் பல நூறு பெண்களை இழக்க வேண்டியுள்ளது.


 


இப்படி பெண்களை பல வழிகளிலும் நுட்பமாக குறிவைப்பதென்பது ஆழமான இனஅழிப்பு நோக்கங்களை கொண்டதென்பதை நாம் முதலில் உணர வேண்டும்.’

இந்த பின்புலங்களின் அடிப்படையில் நின்றுதான் தமிழினியின் நூலை நாம் பகுப்பாய்வு செய்ய முடியும். தமிழினி அந்த நூலின் பெரும்பகுதியை எழுதவில்லை என்பதை மறுப்பதற்கான போதிய தர்க்க நியாயங்களை அதை வெளியிட்டவர்களே வெளிப்படுத்தியுள்ளார்கள்.


 


ஆனால் நாம் அதற்குள் நுழையாமலேயே அவர் அதை எழுதியிருப்பார் என்ற அடிப்படையிலும் அந்த நூல் உள்ளடக்கங்களை நிராகரிக்க முடியும். ஆனால் நாம் அதையும் செய்யப் புகவில்லை.


 


ஏனென்றால் இனஅழிப்பு வதைமுகாமில் வைத்து கொடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு அதன் விளைவாக உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டு இனஅழிப்பு அரசால் நுட்பமான முறையில் சமூகத்திற்குள் களமிறக்கப்பட்டவர் தமிழினி.


 


மே18 இற்கு பிறகு இன அழிப்பு அரசு “புனர்வாழ்வு முகாம்கள்” என்ற பெயரில் நடத்திய இனஅழிப்பு வதை முகாம்களில் வைத்து நடத்திய “உளவளத்துணை ஆலோசனைகள்” (Counseling) குறித்து பக்கம் பக்கமாக எழுதலாம்.


 


அது உளவளத்துணை ஆலோசனை என்ற பெயரில் நடத்தப்பட்ட மிக மோசமான வன்முறையும் அப்பட்டமான மூளைச்சலவையுமாகும் ( Brain wash).. தமிழினி போன்ற ஆயிரக்கணக்கான பேராளிகள் மீது நடத்தப்பட்டது இதுதான்.

இது எமது போராளிகளின் உளவியலை எப்படி ஊனமாக்கும் என்பதை நாம் விரிவாக வேறு விளக்க வேண்டுமா? இந்த ஊனமுற்ற உளவியல் கடந்த கால போராட்டத்தின் மீதான வெறுப்பாக – போராட்டத்தை முன்னெடுத்த சக போராளிகள் மீதான வெறுப்பாக, தமது கனவு தேசம் குறித்த அருவருப்பாக, வசைபாடல்களாக, காட்டிக்கொடுப்புக்களாக, அச்சம் நிறைந்த ஒப்படைப்பாக, எதுவுமே பேச முடியாத மௌனமாக என்று பல்வேறு வடிவங்களில் வெளிப்பட்டுக்கொண்டிருக்கிறது.


 


அவர்களது உளவியல் ஊனப்படுத்தப்பட்டு குருரமாகச் சிதைக்கப்பட்டு சமூகத்திற்குள் நடமாட விடுவதன் ஊடாக இனஅழிப்பின் அடுத்த கட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிறது இனஅழிப்பு அரசு. தமிழினி இதன் குறியீடு.


 


அத்துடன் இறுதி இனஅழிப்பில் கொல்லப்பட்டவர்கள் போக எஞ்சியுள்ள மக்களின் உளவியலும் திட்டமிட்டு சிதைக்கப்படுகிறது. பசியும் பஞ்சமும் கலாச்சார சீர்கேடுகளும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது. காரணம் இந்த நிலைக்கான காரணத்தை தாம் கண்ட கனவின் மீதான அருவருப்பாகவும் அந்த கனவை தாங்கிய போராளிகள் மீதான வெறுப்பாகவும் மக்கள் கண்டடையும் வண்ணம் அவர்களின் உளவியல் ஊனப்படுத்தப்படுகிறது. துரதிஸ்டவசமாக எமது மக்களும் இதை நம்பத் தொடங்கிவிட்டார்கள் என்பதை வேதனையுடன் இந்த இடத்தில் குறிப்பிட்டேயாக வேண்டும்.


 


இது இனஅழிப்பு அரசின் திட்டமிட்ட ஒரு சதியின் ஒரு பகுதிதான்.


 


விளவாக சமூகத்தில் புதிய அடையாளங்களுடன் பேதலித்த உளவியலுடன் உலாவரும் பேராளிகளுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி உருவாகிறது. விளவாக தமது ஊனப்பட்ட உளவியலை இருதரப்பும் விரித்தும் பிரித்தும் வளர்த்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகிறது.


 


முடிவாக வசைபாடல்களும் பறக்கணிப்பும் பல்வேறு வடிவங்களாக வெளித்தளளப்படுகின்றன. இதை இனஅழிப்பு அரசும் அதன் அடிவருடிகளும் அறுவடை செய்கிறார்கள்.


 


அதன் ஒரு வடிவம்தான் தமிழனியின் நூல்.


 


ஒரு இனத்தை திட்டமிட்டு உளவியல்ரீதியாகச் சிதைப்பது இனஅழிப்பு நோக்கங்களை கொண்டது என்று அனைத்துலக இனஅழிப்பு சட்ட வரைபுகள் வலியுறுத்துகின்றன. எனவே தனது கொள்கையில் மூச்சாகவும் வீச்சாகவும் இருந்த ஒரு போராளி இன்று இனஅழிப்பு சித்திரவதை முகாமிற்குளளிருந்து வெளிவந்த பிற்பாடு எப்படி அதற்கு எதிர்மாறாக மாறினார் என்பதை நாம் இனஅழிப்பு பின்புலத்தில் மிகச் சுலபமாக அடையாளம் காண முடியும்.


 


Lliving genocidal bio makers எனப்படும் உயிர் வாழும் இனஅழிப்பு ஆதாரங்களை தனது உடலில் சுமந்து புற்றுநோய்க்கு பலியாகியது மட்டுமல்ல குருரமாக இனஅழிப்பு வதைமுகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டதன் விளைவாக ஊனப்படுத்தப்பட்ட உளவியலின் பிரகாரம் ஒரு நூலையும் எழுத உந்தப்பட்டதன் விளைவாக இனஅழிப்பின் சாட்சியாக அந்த மண்ணில் வீழ்ந்நதிருக்கிறார் தமிழினி.


 


கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பில் கொல்லப்பட்டார் என்று தமிழினியின் மரணத்தின் போது நாம் விளித்திருந்தோம். இன்று அவரது வாழ்வும் மரணமும் மட்டுமல்:ல அவரது நூலும் அதையே உறுதி செய்கிறது.


 


இதன் வழி அவர் தான் பேராடிய கொள்கைக்கு ஏதோ ஒரு வகையில் நியாயம் செய்திருக்கிறார் என்றே கூற வேண்டும்.


 


இனி அந்த நூலின் உள்ளடக்கம் குறித்து நாம் கவலைப்படத் தேவையில்லை. தமிழினியின் நூலை காவுபவர்களின் நுட்பமான அரசியலை அடையாளம் கண்டு அவர்களை நிராகரிப்பது மட்டுமல்ல தமிழனியின் படுகொலைக்கு காரணமான இனஅழிப்பு அரசியலை அடையாளம் கண்டு அதை அனைத்துலக மட்டத்தில் அம்பலப்படுத்துவதனூடாகவே எமது நீதிக்கான பாதையை வகுக்க முடியம்.


 


தமிழினி நமக்கு விட்டு சென்றிருக்கும் ஒற்றை செய்தி இதுதான்..

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.