20 ஆவது திருத்த விவாதத்தை ஒத்திவைக்க வேண்டும்!



கொராேனா தொற்றாளர்கள் நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இனம் காணப்பட்டு வருகின்றனர். இவ்வாறான நிலையில் நாட்டின் சட்டத்தை மதித்து 20ஆவது திருத்த பாராளுமன்ற விவாதத்தை ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சியின் பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த பாராளுமன்ற விவாதத்தை பிற்போடுமாறு தெரிவித்து அவர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொவிட் தொற்றாளர்கள் நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் இனம் காணப்பட்டிருக்கின்றனர். அரசாங்கத்தின் கவனயீனம் காரணமாகவே இது பரவும் நிலைக்கு சென்றிருப்பது தெளிவாக காணக்கூடியதாக இருக்கின்றது. கடந்த ஏப்ரல் 22ஆம் திகதியில் இருந்து கொராேனா தொற்று அச்சுறுத்தல் நாட்டில் முற்றுப்பெற்றதாக அரசாங்கம் பல தடவைகள் தெரிவித்திருந்தபோதும், அவ்வாறு இடம்பெறவில்லை.

மேலும் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான சட்டத்திட்டங்களை கொண்டுவருவதற்கு அரசாங்கத்துக்கு 10மாதங்கள் வரை சென்றிருக்கின்றன. உலகில் ஏனைய நாடுகள் மே மாதத்தில் இதற்கு தேவையான ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி இருந்தன. இருந்தபோதும் தாமதித்தேனும் தற்போது பல ஒழுங்கு முறைகள் வர்த்தமானி படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த ஒழுங்கு முறைகளை அதன் பிரகாரமே பின்பற்றுவதாக இருந்தால் கூட்டங்கள் நடத்தப்படுவது வரையறுக்கப்படவேண்டும். சமூக இடைவெளி பாதுகாக்கப்படவேண்டும். 

அவ்வாறாயின் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்கள் அமைக்கப்பட்டிருப்பது, அரசாங்கத்தின் சுகாதார ஒழுங்குமுறைகளுக்கு முரணாகும். அதேபோன்று கூட்டங்கள் நடத்துவதை வறையறுத்திருக்கும் நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடரை நடத்துவது சட்டத்துக்கு முரணாகும்.

அதனால் சட்டம் இயற்றப்படும் இடத்திலே சட்டத்தை மீறுவதாக இருந்ததால், நாட்டுக்கு வழங்கும் முன்மாதிரி என்ன?. எனவே இவ்வாறம் பாராளுமன்றத்தில் இடம்பெற இருக்கும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். 

மேலும் மேலே தெரிவிக்கப்பட்டிருக்கும் விடயங்கள் தொடர்பாக கலந்துரையாட சந்தர்ப்பம் ஒன்றை வழங்கி, இந்த வாரம் இடம்பெற இருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரை அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் சட்டதிட்டங்களுக்கு அமைய கூட்டுமாறு, எதிர்க்கட்சிகள் என்றவகையில் நாங்கள் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றோம்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.