உயர்தரப்பரீட்சை மாணவர்களுக்கு கல்வியமைச்சின் அறிவிப்பு!க.பொ.த உயர்தரப்பரீட்சை நடைபெறும் பரீட்சை மத்திய நிலையங்களில் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகள் பேணப்படாவிட்டாலோ அல்லது மாணவர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலோ, அதுகுறித்து 1988 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தமக்கு அறியத்தருமாறு கல்வியமைச்சு கேட்டுக்கொண்டிருக்கிறது.

நாடளாவிய ரீதியில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பரீட்சை மத்திய நிலையங்களில் சுகாதாரப்பாதுகாப்புடன் தொடர்புடைய பிரச்சினைகள் காணப்படுமாயின், அதுகுறித்து அறியத்தரவேண்டிய முறை பற்றி கல்வியமைச்சு அறிவித்திருக்கிறது.

இதுகுறித்து கல்விமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

நாடளாவிய ரீதியில் 2648 பரீட்சை மத்திய நிலையங்களில் கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த உயர்தரப்பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இம்முறை 362,824 மாணவர்கள் உயர்தரப்பரீட்சைக்குத் தோற்றும் அதேவேளை, உரிய சுகாதாரப்பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாகவே சுகாதார அமைச்சினால் பரீட்சைகள் நடத்தப்படுகின்றன.

தற்போது அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கொரோனா வைரஸ் பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு சுகாதார, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துப் பிரிவினரின் முழுமையான ஒத்துழைப்பைப்பெற்று மாணவர்கள் பூரண பாதுகாப்புடன் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு அவசியமான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதேபோன்று பரீட்சை மத்திய நிலையங்களை முழுமையாகத் தொற்றுநீக்குவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அந்தந்த மத்திய நிலையங்களுக்குப் பொறுப்பான அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏதேனுமொரு பரீட்சை மத்திய நிலையத்தில் மாணவர்களின் சுகாதாரப்பாதுகாப்பைக் கேள்விக்குட்படுத்தக்கூடிய விதமாக பொறுப்பற்ற வகையிலான செயற்பாடுகள் இடம்பெறுமாக இருந்தால் அல்லது உரிய சுகாதாரப்பாதுகாப்பு வசதிகள் கிடைக்கப்பெறாமல் இருந்தால், அதுகுறித்து 1988 என்ற இலக்கத்தினூடாகத் தொடர்புகொண்டு கல்வியமைச்சுக்கு அறியத்தரமுடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Blogger இயக்குவது.