ஏனைய பௌத்த பீடங்களும் 20 வது குறித்து நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் - ரஞ்சித் மத்தும பண்டார

 உலக நாடுகள் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சித்து வருகையில் , இலங்கை அரசாங்கம் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கே முயற்சித்து வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் , பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இதேவேளை , 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் நாடு அரசாட்சி முறைக்கு செல்லும் என்றும் , தற்போது 20 ஆவது சட்டமூலத்திற்கு எதிராக அமரபுர , ராமான்ய பீடத்து தேரர்கள் தங்களது கருத்தை தெரிவித்தது போன்று , ஏனைய பீடங்களும் அவர்களது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கோரிக்கை விடுத்த அவர் மேலும் கூறியதாவது ,

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக முழு நாடே அச்சத்தில் இருக்கும் போது , அரசாங்கம் அரசியலமைப்புக்கான 20 ஆவது திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சித்து வருகின்றது.

ஏனைய உலக நாடுகள் வைரஸ் தொற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காக தடுப்பூசிகள் கண்டுப்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்ற நிலையில், இந்நாட்டு அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலே கவனம் செலுத்தி வருகின்றது.

வைரஸ் பரவலை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகளின் இலங்கைக்கு இரண்டாம் இடம்வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு சில தினங்களில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.

20 ஆவது திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் அது பாரிய நெருக்கடிகளை தோற்றுவிக்கும் என்றும் , அதனால் நாட்டுக்கு முழு அரசியலமைப்பு வரைபொன்றே தேவை என்றும் இலங்கை அமரபுர , ராமான்ய பீடத்து தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 இவர்கள் கூறியுள்ள விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்திற்கு தெரிவிக்கின்றோம். இதேவேளை , 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பாக ஏனைய பீடங்களும்  தங்களது நிலைப்பாட்டை நாட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.